சனி, 24 மே, 2014

என்னவளுக்கு !

என்னவளுக்கு !
இன்று 
தொழிலாளர் /உழைப்பாளர் தினம் 
இன்றுதான் 
உன் பிறந்த தினமும் 

"எட்டு மணி நேர வேலை "என்று
தொடங்கி ரஷ்ய புரட்சியே வெடித்தது 
என்னவளே !
எந்த புரட்சியும் இல்லாமல் 
இன்னும் 
இரு எட்டு மணி நேர வேலை செய்கிறாய் 
ஒற்றையாய்
ஒரு தசாப்தம் 
குடும்ப சுமை உன்மீது 
இரட்டையாய் ஒன்றானோம்
புலம் பெயர்ந்து
விரும்பா/எதிர்பாரா புலம்பெயர்வு

எனக்கு எல்லாமே போனஸ் தான்
நீயும் எனக்காய் மாறிப்போனாய்
குழந்தைகளுக்காய்
புதிய மண்ணில்
மீண்டுமொரு போராடியவாழ்வு
அத்திவாரத்திலிருந்து
ஆயுளின் கால்வாசிதான் மீதமிருக்க 

அலைகளில் அசைந்தவாழ்வு
சுனாமியாய் அடித்து ஓய்ந்தது

உயிரால் வரைந்த ஓவியம்
உலகால் கலைந்த சீவியம்

மனிதர்களுக்கு கடின வாழ்வு
பச்சோந்திகளுக்கு இலகு வாழ்வு

மரம் வேரோடு தீப்பற்ற
குருவிகளின் கூடு தொலைந்தது 
வேரற்ற மண்ணில் 
வேதனையோடு மீள கட்டும் கூடு 
குருவிகளுக்கானதா?


சோகங்களை
இயன்றவரை மறைத்து
அமைதியாய் அசைவோம்
காயம் ஏற்று மயிரிழையில்
உயிர் தப்பியவள் நீ
மயிரிழையே
எம் வாழ்வை உயிர்ப்பிக்கிறது
தொடர்ந்தும்
அன்பால் எமை கரை
இயல்பாய் கவிதை வரை
உன்னை வாழ்த்த
நானொன்றும் வேறல்ல
நானும் நீதான்
Share/Save/Bookmark

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக