வெள்ளி, 26 டிசம்பர், 2025

நான் வாழ்ந்த சூழல் எனக்கு கலைத்துவமான பரிச்சியத்தை தந்தது உண்மைதான் இருந்தாலும் எழுபதுகளில் சுதந்திரன் வாரப்பத்திரிகையின் தாக்கமும் எனக்குள் ஒரு இலக்கிய தாகத்தையும் உருவாக்கியது.1977 ஆம் ஆண்டு தமிழ் சிங்கள இனக்கலவரம் என்ற பெயரில் இலங்கை அரசால் தமிழ்மக்கள் மீது நடாத்தப்பட்ட அராஜகம் எனக்குள்ளும் தாக்கத்தை செலுத்தியது. அப்பொழுது "வேதனை சோதனை சாதனை" என்ற தலையங்கத்தில் ஒரு நீள் கட்டுரையை எழுதினேன். அது பாடசாலையிலும் வெளியிலும் ஒரு சுற்றுவட்ட வாசிப்பிற்கு வரவேற்புடன் போய்வந்து. பின்பு இப்படி கட்டுரைகளை இடைக்கிடை எழுதுவது என்னை சமநிலைப்பத்தியது ஆனால் இவை அச்சாகியிருக்கவில்லை. என்னால் எழுத முடியும் என்ற நம்பிக்கையை தந்தது. "ஓ எங்கள் அருணன் " என்ற கட்டுரை திலீபனுக்கு பிடித்திருந்தது.


Share/Save/Bookmark

ஞாயிறு, 14 டிசம்பர், 2025

ஒரு படைப்பாளியாய் தோற்றுப்போகிறேன்.

1998 ஆம் ஆண்டு எமது பொறுப்பாளராகவும் இருந்த சு ப தமிழ்செல்வன் அவர்களின் திருமணம் மிக எளிமையாக நடைபெற்றது.எமது மருத்துவ அணியினர் கிளிநொச்சி தென்னியன்குள காட்டுப்பகுதியில் அமைந்திருந்த மருத்துவமுகாமொன்றில் தம்பதியினரிற்கான சிறு வரவேற்பு ஒன்றினை ஒழுங்கு செய்திருந்தோம். அந்த நிகழ்வில் சகோதர நண்பன் சத்தியா நாங்கள் தம்பதியினருக்கு வழங்கவிருந்த வாழ்த்துமடலில் இருந்த கவிதையை தனக்கேயுரிய பாணியில் அமோக வரவேற்புடன் வாசித்தான்.கவிதையை வாசித்து முடித்தவுடன் என் அருகில் அமர்ந்திருந்த தமிழ்ச்செல்வன் நீங்கள்தான் இந்த கவிதையை எழுதியது என்று சிரித்தபடி சொன்னார். 2007 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் எங்கள் தமிழ்செல்வன் எங்களைவிட்டு நிரந்தரமாக பிரிந்தார். அடுத்தநாள் ஈழநாதம் தினசரியில் மருத்துவப்பிரிவு சார்பாக எனது பாடல்வடிவ துயர் கவிதை வெளிவந்தது. ஒரு படைப்பாளி மகிழ்விற்கும் துயருக்கும் எழுதவேண்டியிருக்கிறது. பத்மலோஜினி அக்கா (Dr அன்ரி ) அவர்களுக்கு திருமணம் முற்றாகியதை அறிந்து அவருக்கு ஒரு கவிதை எழுதி அனுப்பினேன். அந்த கவிதையை மதி அக்காவிற்கும் காட்டியதாய் மதி அக்கா பிறிதொரு சந்தர்ப்பத்தில் சொன்னார். முள்ளிவாய்க்காலில் நானும் பத்மலோஜினி அக்காவும் ஒன்றாக கடமையில் இருந்தோம் , அப்போது அக்கா சொன்னார் அந்தக்கவிதையை பத்திரமாக வைத்திருக்கிறேன். அவ்வளவு இடப்பெயர்வுகளுக்கு பிறகும் அக்கவிதையை பத்திரப்படுத்தியதாய் சொன்னது ஒரு படைப்பாளியாய் அந்நேரத்திலும் இனித்தது. இப்பொழுதெல்லாம் ஒன்றாக வாழ்ந்தவர் பற்றி சிறுகுறிப்பாவது எழுத முனைந்தும் முடியாமல் எழுந்துபோவது வழக்கமாகி போயிற்று. ஒரு படைப்பாளியாய் தோற்றுப்போகிறேன்.


Share/Save/Bookmark

ஞாயிறு, 17 ஆகஸ்ட், 2025

ஒரு இளவலின் முகப்பருபோல புல்நுனியில் ஒரு பனித்துளி எங்கிருந்தோ வந்து வீழும் மழைத்துளி தாய்நிலத்தில் எழும் மண்வாசம் தொழிலாளியின் வியர்வைத்துளி காயமுன் கொடுத்துவிடு கூலி காய்ந்த பின்னும் வலிக்கும் முள்ளிவாய்க்கால் கண்ணீர்த்துளி


Share/Save/Bookmark

சனி, 2 ஆகஸ்ட், 2025

மனதில் அவர் இருப்பார் அண்ணனாய் ஆலோசகனாய் என்றும் இதைவிட என்னிடம் எந்த வார்த்தைகளுமில்லை


Share/Save/Bookmark

திங்கள், 14 ஜூலை, 2025

போர்ச்சூழல் , அதற்குள் மக்களை தொற்று நோய்களிலிருந்து காப்பாற்றுவது மக்களின் சுகாதார போசாக்கு நிலையை மேம்படுத்துவதற்காக பல வேலைத்திட்டங்களை நாளும் மேற்கொண்டிருந்தோம். ஒவ்வொருநாள் வேலைத்திட்டங்களுக்கு பின்னும் புதுப்புதுச் செய்திகளை விழிப்புணர்வினை தாயக ஊடங்கங்களுக்கு அனுப்பிவிட்டுத்தான் அடுத்த கடமையிற்கு சென்றேன். அந்தக்காலங்களில் குறைந்தது இரண்டு அல்லது மூன்று எனது செய்தியாக்கம் தாயக ஊடங்கங்களில் நாளும் வந்துகொண்டிருந்தன.


Share/Save/Bookmark
திசையற்று பறக்கிறது கனவுகள் தொலைத்த பறவை சிறகடிக்கும் ஒலி ஒப்பாரியாகிறது சனநெரிசல் பாதைகள் நீங்கள் இல்லை மனசு வெறிச்சோடுகிறது இருள் கவ்விய இதயம் வெயில் சுடுகிறது எதுவும் நடக்கவில்லை


Share/Save/Bookmark

வெள்ளி, 20 ஜூன், 2025

நாங்கள் சுவாசிக்கும் காற்று

வயல்கரையில் வியர்வை உலர்த்திய காற்றும் கடற்கரையில் வெக்கையை தனித்த காற்றும் கிபீர் இரைச்சலோடு வந்து முகத்தில் அறைந்த காற்றும் குழந்தையிற்கு பால்மா வாங்கமுடியா தாயின் ஏக்க மூச்சும் பட்டம் ஏறும் காற்றும் புல்லாங்குழல் துளையினூடு வெளிவரும் இசைக்காற்றும் மனிதர்கள் விலங்குகளின் இறுதி மூச்சும் மகளே ! நாங்கள் சுவாசிக்கும் இக்காற்றே !! காற்றுக்கு வேலியில்லை, பேதமில்லை நாடுமில்லை, பகையுமில்லைே


Share/Save/Bookmark
Bookmark and Share