சனி, 29 மே, 2010

எழுதா விதிக்கு அழுதா தீருமோ ?

குற்றமறியா திசநாயகத்திட்கு
நீதிமன்று இருபது வருடசிறை
மகிந்தவால் ஒரே நாளில்
கருணை விடுதலை
நீதியின் விலை என்ன?



கிளியில்
பாலர் பூங்காவை அழித்து
இராணுவ நினைவிடம் .
அத்திவாரத்தை பிடுங்கி
கூரைத்தகடுகள் தருகிறது
காந்தி இறந்த தேசம்.

உலகிற்கு சோகம்
கவிதையாய்--,கதையாய்
படமாய்--,சீரியலாய்
எங்களுக்கோ வாழ்வாய்.

வைகாசி பதினேழு
சர்வதேச தொலைத்தொடர்பு தினம்.
எங்களுக்கோ
தொடர்புகள் அறுந்ததினம்.

பத்துக்கோடி
தரமுன்வருபவர்களும்
ஒருவிரலைத்
தர முன்வரமாட்டார்கள் .
மாவீரர்களே
நீங்களோ உயிரையே தந்தீர்கள்.
எங்கள் மனங்களே
உங்கள் நினைவாலயம் .

சிங்களரே
நாம் சிறுகச் சேமித்து,
தேடிய சொத்தை சூறையாடினீர்.
பரவாயில்லை
நீங்களாவது
பாவித்து விட்டுப் போங்கள் .
மிகுதியை ஏன் கொளுத்தினீர்
பாலர் புத்தகங்களைக் கூட

மீள் குடியேற்றமாம்
உலக நிதி பெற்று-அதில்
எம்மண்ணில்
சிங்களக் குடியேற்றம்.

முத்துவேலர்களால்
முத்துக்குமார்களை இழந்தோம்
இன்று
கொழும்பில்
அனைத்துலக இந்தி திரைவிழா
திரை
இரத்தக்கறையை மறைக்குமா?
வெள்ளைக் கொடியுடன் வந்தவரையே
சுட்டுக் கொன்றவருடன்
கூட்டுவைக்கும்
வெள்ளைப் பிரம்பு அயல்.

எழுதா விதிக்கு அழுதா தீருமோ ?
இருப்போமா?
இல்லாது போவோமா?
யாவருமாய் தீர்மானிப்போம்.      

-சுருதி-


Share/Save/Bookmark

1 கருத்து:

Unknown சொன்னது…

இனி ஒரு விதி செய்வோம் ..

கருத்துரையிடுக

Bookmark and Share