வியாழன், 13 டிசம்பர், 2012

இவன் அவனேதான்         (1)

கிளிநொச்சி முந்தி மாதிரி இல்லை.செருப்பில குத்தி 
இருக்கிற முள் உடன் மிச்ச காலத்தை கடக்க வேண்டியிருக்கு.அவன் தொடர்ந்து 
கதைத்துக்கொண்டு இருந்தான்.அவன் முன்னாள் போராளி.பதின்ஐந்து 
வருடங்கள் இயக்கமாய் இருந்து முள்ளிவாய்க்காலில்   சரணடைந்து ,
புனர் வாழ்வு பெற்று ?சமூகத்தோட வாழ்கிறான்.அவனுக்கு மனைவியும் 
ஒரு பிள்ளையும் இருக்கு.இது போதாதென்று அவனது தங்கையும் தங்கையின் இரண்டு 
பிள்ளைகளும் அவர்களோடு இருக்கிறார்கள்.தங்கையின் மனுஷன் போராளியாய் 
இருந்து ஒரு காலை இழந்து சமாதானத்தோட இயக்கத்தில இருந்து விலத்தி,
சண்டை தொடங்கி இயக்கத்திற்கு ஆளணி பிரச்சனை பெரிதாக தானாய் 
போய் மீள இணைந்து ஆனந்த புரத்தில வீரச்சாவு.


  அவனுக்கு பெரிய படிப்பு இல்லை.படிக்கிற காலத்தில இயக்கத்திற்கு போனா 
அது எப்படி இருக்கும். கொஞ்சக்காலம் மிதி வெடி அகற்றுற வேலை செய்தான்.
அந்த வேலை அவன்ர மனிசிக்கு பிடிக்கவில்லை.இப்ப அதை விட்டிட்டு கட்டிட 
வேலைக்கு போறான்.மேசனுக்கு உதவி.முட்டாள்.ஆனால் ஒரு நாளைக்கு ஆயிரம் 
ரூபா கிடைக்குது.இப்ப சாமான் எல்லாம் விலைதானே எவ்வளவு உழைத்தும் 
கட்டாது.
உழைப்பு கிடைத்தாலும் நிம்மதி இல்லை.முன்னாள் போராளிதானே.
எல்லாத்திற்கும் பதிவும் விசாரனையும்தான்.அவன் இயக்கத்தில வேவு பிரிவில 
இருந்தவன்.தளபதி வீரமணியின்ர வளர்ப்பு.சமாதான காலம் அரசியல் துறையில 
இருந்ததில ஒரு வருட புனர்வாழ்விலேயே   வெளியால வந்திட்டான்.இவங்கட 
பதிவில எல்லாம் அரசியல் துறை என்றுதான் இருக்கு.


அவனுக்கு தாயில சரியான விருப்பம் ..அவன்ர தாய் வவுனியா 
இராமநாதன் முகாமில நோய்வாய்ப்பட்டு, வவுனியா ஆஸ்பத்திரிக்கு 
தாயை மட்டும் கொண்டு போய் ,முகாமில தங்கியிருந்த இவையின்ர 
குடும்பத்திற்கே இரண்டு கிழமையாலதான் அவ இறந்ததை சொன்னவை.
இவனுக்கு மூன்று மாதத்தாலதான் தெரியும். தாய் இருக்கைக்க இவனை ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் 
 church இற்கு போகச் சொல்லுறவ.அவ இருக்கைக்க போறதில்லை .இப்ப போகோணும் மாதிரி 
இருக்கு அதால போன கிழமை அந்த church இற்கு போயிருந்தான்.அந்த church இல அவனைக்கண்டான்.
வன் அவனேதான். church முடிய மெதுவாய் அவனை பின்தொடர்ந்து போய்ப்பார்த்தான். இப்பவும் அவனின்ர வேவு மூளைதான் வேலை செய்யுது . அவன் 
முந்தி கிளிநொச்சி பொன்னம்பலம் இயங்கிய கட்டிடத்திற்குள் போயிட்டான்.அது 
இப்ப ஈ பீ டி பீ யின் அலுவலகம். பொன்னம்பலம் மருத்துவமனையிட்கு முந்தி ஒருக்கா 
போயிருக்கான்.தாயிற்கு கடுமையான வருத்தம் வந்து கிளிநொச்சி 
ஆஸ்பத்திரியில வைச்சிருந்தது.ஆஸ்பத்திரியில சொல்லிப்போட்டினம் 
செப்டீசீமியா நோய் உடன அம்புலன்சில வவுனியாவிற்கு ஏற்றப்போறம்  என்று.
தாயோட போக ஒருத்தரும் இல்லை.தங்கச்சியிட்கு போக பயம் .மனுஷன் இயக்கம்தானே.
அப்ப துண்டு வெட்டிக்கொண்டுவந்து பொன்னம்பலத்திலதான் வச்சிருந்தவை .
அப்ப ஒருக்கா தாயை பார்க்க பொன்னம்பலம் மருத்துவமனையிட்கு போயிருந்தான்.

                            (2)

 2008 ஆம் ஆண்டின் பிற்பகுதி எங்கட ஏழு பேர் கொண்ட வேவு அணி ஜெயபுரத்தில ஆமியின்ட கட்டுப்பாட்டுக்குள்ள நின்டது.அன்றிரவு
பதினொரு மணிபோல எங்கிட அசுமாத்தம் ஆமிக்கு தெரிஞ்சிட்டுது.
பிறகென்ன பராலைட்டை அடிச்சுக்கொண்டு துளைக்கத்தொடங்கினான்.
நாங்கள் தென்னியங்குளம் பக்கமாய்ப்போய்  கோட்டைகட்டியகுளம்
வந்து ஆரோக்கியகுளம் பகுதிக்குவந்து பிரிஞ்சு படுத்துட்டம்.விடிய
நாலரை மணியிருக்கும்.நானொரு பத்தைக்குள வந்து படுத்து
நித்திரையாகிட்டன்.விடிய வெளிச்சம் வரத்தான் தெரிஞ்சுது அது ஆமியின்ர ஒருமுகாம்.  நான் படுத்திருந்ததுக்கு இடக்கை பக்கமாய் ஐம்பது மீட்டர் தூரத்தில
ஒரு கிடுகால மேய்ஞ்ச கொட்டில் அது ஒரு சந்திப்பிடமாய் இருக்கவேணும் .நாலு ஐந்து பேராய் அங்க இடைக்கிடை வந்து போய்க்கொண்டிருந்தினம்.ஆமி உடுப்போடையும் சிவில் உடுப்போடையும். திடிரென ஐந்து பேர் என்னுடைய பத்தைக்கருகால வந்து சிவில் உடுப்போடை தாண்டிப்போய்ச்சினம் .அவை எங்கட தமிழில கதைச்சுக்கொண்டு போய்ச்சினம்.  அந்த கொட்டிலுக்கு போயிட்டு
அரை மணித்தியாலத்தில வெளியால வந்திச்சினம்.அதில ஒருத்தன்
வந்து என்ர பத்தைக்கு முன்னால நிற்க மற்றவங்கள் போயிட்டாங்கள் .  அவன் ஒரு மனித்தியாலத்திட்கு கிட்ட அதில நின்றான்.நான் அவன்ர
முகத்தை நல்லாய் பார்த்தேன்.ஒருக்கா இயக்கம் செல் அடிக்க பத்தைக்கு
முன்னால விழுந்து படுத்தான்.என்னை அவன் கண்டாலும் அதுக்க
இருந்து குண்டு அடிக்க ஏலாது.துவக்கு வழமை மாதிரி சேம்பரிலேயே இருந்தது.
எனது பத்தைக்கு அருகால இன்னும் நாலு பேர் வந்தாங்கள் .அவங்களின்  
தமிழை வைச்சு யார் என்று பார்த்தேன்.அது கருணான்ர ஆட்கள்
ஒருத்தனுக்கு ஒருகால் கட்டை அவன் ஜெயசுக்குறுவிக்குள்ள
நின்டவன். அவன் ஒரு மாஸ்டர்.ஒரு வயது போன ஐயாவை பின்னுக்கு
கைகட்டினபடி கொண்டுவந்தாங்கள் .எனக்கு முன்னால நின்றவன்
இவையைத்தான் பார்த்துக்கொண்டு நின்றிருக்கோணும். டேய் கிழடு என்று அந்த ஐயாவை அதட்டினான்.விறகு வெட்டவந்தவர் பிடிச்சிட்டோம்
என்று இவனுக்கு சொன்னாங்கள்.எனக்கு முன்னால நின்றவன் அந்த ஐயாவின் முகத்தில் ஓங்கி குத்தினான்.இரத்தம் ஊற்றிற்று.அந்த
மாஸ்டர் தொடர்ந்து அடிக்கவிடயில்லை.அவங்கள் அந்த ஐயாவை ஒரு மெல்லிய மரம் ஒன்றோட கட்டிப்போட்டு சந்திப்புக்கு போயிட்டாங்கள். அரை மணித்தியாலத்தால வெளிய வந்தாங்கள் .அவங்களோட இன்னும்
இரண்டு ஆமி உத்தியோகத்தர்கள் வந்தாங்கள் .அந்த ஐயாவோட கதைக்கிறது பட்டும் படாமல் கேட்டுக்கொண்டிருந்தது.டேய் எங்கட ஆட்கள் கிளிநொச்சிக்குள்ள இருக்கிறாங்கள் அது தெரியுமாடா?இவன் கதைச்சது தெளிவாய் கேட்டுது.அந்த ஐயாவிற்கு ஐம்பது வயதுதான்
இருக்கும் ஆனால் ஏழ்மையால எழுவது வயது மதிப்பில் இருந்தார்.
ஒரு ஐந்து நிமிட விசாரனைக்குப்பிறகு வாயிட்குள்ள துவக்கு நுனியை வைச்சு சுட்டான்.மரத்தில கட்டினபடி தலை தொங்கிச்சுது.பிறகு எல்லோரும் கலைஞ்சிட்டாங்கள்.
அந்த மாஸ்டர்  இரணைப்பாலையில புலிகளின்ர கட்டுப்பாட்டு பிரதேசத்திட்குள்ள ஊடுருவி இருக்கைக்க பிடிபட்டிட்டார்.அவருக்கு
ஒரு கால் கட்டை என்ர படியால ஒடேலாமல் போய்ச்சு.இன்னும் இரண்டு பேர் அவரோட நின்றவங்கள் அவங்கள் ஓடித்தப்பிட்டாங்கள்.        
                                 (3)

  நாங்கள் இப்ப ஒரு பள்ளிக்கூட கட்டிட வேலை செய்யிறம்.அந்த பள்ளிக்கூடத்திற்கு அவன் வந்தான்.அவன் sun glass அணிந்திருந்தான்.அவன் இப்ப ஈ பீ டி பி யின் பிரமுகர்.அவனோட
வெளிநாட்டில இருக்கிற தமிழ் ஆள் ஒருத்தரும் வந்திருந்தவர்.அவர்
வெளி நாட்டில அரசாங்கத்திற்கு வேலை செய்யுற ஆளாய் இருக்கோணும்.இவையளோட முந்தி இயக்கத்திற்கு விசுவாசம் போல நடித்த இருவரையும் காணக்கூடியதாய் இருந்தது.இவன் அவன்தான்
மனசு மட்டும் திருப்பித்திருப்பி சொல்லிக்கொண்டிருந்தது.

-       சுருதி  -  


Share/Save/Bookmark

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக