வியாழன், 20 டிசம்பர், 2012

இவர்களை தெரியுமா   கமலத்திற்கு இரண்டு பிள்ளைகள்.இருவருமே சிறுவயதில் படுசுட்டிகளாய் இருந்தார்கள்.இருவருக்கும் இரண்டு வயதுதான் வித்தியாசம்.விபத்தொன்றில் கணவனை இழந்த கமலம் தோட்டம்
செய்தும் உடுப்பு தைத்துக்கொடுத்தும் பிள்ளைகளை வளர்த்தாள்.  பிள்ளைகள் சிறுவயதில் கள்ளன் போலிஸ் விளையாடுவார்கள்.
இருவருமே கள்ளனுக்கு போக மறுப்பார்கள்.கமலம்தான் மாறி மாறி
விளையாடச்சொல்லுவாள்.விளையாட்டு படிப்புடன் தங்களுக்குள் அடிபட்டும் கொள்வார்கள் .சிறிது நேரத்தில் கோபம் தீர்ந்து சகோதர பாசம் பொங்க நிற்பார்கள்.
ஒரு அதிகாலைப்பொழுதில்  அண்ணன் ஒரு கடிதம் எழுதி வைத்துவிட்டு இயக்கத்திற்கு போனான்.கமலமும் தம்பியும் உடைந்து போனார்கள்.
தம்பி கமலத்தை ஓரளவு ஆற்றுப்படுத்தினான்.பின் ஒரு நாள் தம்பியும்
இயக்கத்திற்கு போனான்.கமலம் சுருண்டு போனாள்.அடுத்த வருடமே
தம்பி வித்துடலாய் வீட்டுக்கு வந்தான்.கமலம் துயிலும் இல்லமும் வீடுமாய் இருப்பாள்.இடப்பெயர்வோடு வன்னிக்குப்போனாள் .
காலம் உருண்டோட மூத்தவன் ஒரு பெண்ணை விரும்பி திருமணம்
செய்தான்.மருமகள் கமலத்திற்கு மகள் இல்லா குறையை தீர்த்துவைத்தாள்.மூத்தவனுக்கு அடுத்தடுத்து இரு ஆண் குழந்தைகள்
பிறந்தன. கமலத்திற்கு சந்தோசத்திற்கு குறைவில்லை.வாழ் நாள் சந்தோசத்தை அனுபவித்தாள்.
வன்னி மீது போர் கட்டவிழ்த்துவிட துயரம் அவர்களையும் துரத்த
தொடங்கியது.பத்தாவது இடப்பெயர்வில் மாத்தளனுக்கு வந்தார்கள்.
மூத்தவன் பல நாட்களாய் வீட்டிற்கு வந்திருக்கவில்லை.அன்று வீழ்ந்த செல் ஒன்றில் மருமகள் சிதறிப்போனாள் .கமலம் நீண்ட நாட்களுக்குப்பின்
குளறினாள் .மூன்றாம் நாள் மூத்தவன் வந்து நிலத்தில் வீழ்ந்து கதறினான்.
இரண்டு பிள்ளைகளையும் கொஞ்சி தாயிடம் கொடுத்து சனம் செய்யிற
மாதிரி நீயும் செய்யம்மா!அழுது அழுது போனவனை பின்பு காணவேயில்லை.அவன் வீரச்சாவு என்று சொல்கிறார்கள்.
கமலம் மாத்தளனில  இருந்து வவுனியா வந்து இப்ப சொந்த ஊருக்கு
வந்திட்டா.இரண்டு பேரக்குஞ்சுகளோடையும்   பொழுது நல்லா
போகுது.  
போனகிழமை மூத்தவன் திடீரென கேட்டான் . அப்பா எப்படி இருப்பார்?
அம்மா எப்படி இருப்பா? சித்தப்பா எப்படி இருப்பார்? கமலத்திட்ட ஒரு
படமும் இல்லையே காட்ட . கொஞ்ச நேரம் யோசிச்சுப்போட்டு மூத்தவனைப்பார்த்து அப்பா
சரியாய் உன்னை மாதிரி இருப்பார்.சின்னவன் சிரிச்சுக்கொண்டு உண்மையாவா எண்டான்.கமலம் ஆம் என தலையாட்டினாள்.அம்மா
சரியா சின்னக்குட்டி மாதிரி இருப்பா.மூத்தவன் உண்மையாவா உண்மையாவா என கெக்கட்டச் சிரிப்புடன் கேட்டான்.அந்த சிறுசுகளின்
புளுகத்திட்கு அளவில்லை.அந்த சிறுசுகள் அன்றிலிருந்து சண்டை பிடித்ததை கமலம் காணவில்லை.இன்றைக்குக்கூட ஒரு கோப்பையில்தான் சோறு வாங்கிச்சாப்பிட்டாங்கள். 


-          சுருதி -  


Share/Save/Bookmark

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக