புதன், 26 டிசம்பர், 2012

ஹைக்கூ கவிதைகள்


01,

ஒரே பத்திரிகையில் 
பிறந்த நாள் வாழ்த்தும் நினைவஞ்சலியும் 
வாழ்க்கை 

02,

வீடு எரிகிறது 
ஒளி கிடைக்கிறதாம் 
வடக்கில் வசந்தம் 

03,

நெற்றிக் குங்குமப்பொட்டுக்கள்  
அழிக்கப்படுகின்றன
கிழக்கில் உதயம் 

04,

கள்ளர் நாடாளுமன்றில் 
நல்லவர் தெருவில் 
வீடும் நாயும் 

05,

தேர்தலில் 
ராஜ பக்சர்களின் நாகாஸ்திரம் 
கள்ள வாக்கு 

06,

புளியமரத்தடி முனியை 
கண்டதில்லை,பயமுமில்லை
கண்டதும் பயமும் வெள்ளை வானுக்குத்தான்  


07,

நிலவு உறங்கும் இரவு ,நாய்கள் ஊளையிடும் ,
கோழிகள் கூவாது ஏனெனில் களவாடப்பட்டிருக்கும் 
இந்திய அமைதிப்படைக்காலம் 

08,

என்னைப்போல்எப்படி நீ நடித்தாலும் 
என் உணர்வை உணராய் 
விம்பம் 

09,

அம்பு துப்பாக்கிரவை ஆயிற்று 
சேலையும் அப்படித்தான் 
உலக வளர்ச்சி 

10,

"மலம்"நிறத்தால் ஒன்றானாலும் 
சந்தணம் ஆகாது 
ஒட்டுக்குழு அரசியல் 

11,
கண்கள் எண்ணெய்க்கிணறானால்  
ஈழம் எப்படி இருக்கும்?
எரிந்து கொண்டே இருக்கும் 
 12,
ஈழத்தமிழர்  நம்பும் 
இந்தியா
காணல்நீர் 
 13,
உணவைப்பற்றி கதைத்துக் கதைத்தே 
பசியை போக்க நினைக்கிறது 
இனவாத சிங்கள அரசியல் 
14, 
நிர்வாணம் மறைக்க உடை தராமல் 
மழைக்கு பிடிக்க குடை 
ஈழத்தில் அபிவிருத்தி  
 15,
'கொடும்பாவிகளை' அப்பாவிகள் எரிக்க 
கொடும்பாவிகள் உயிர்களை எரிக்க 
ஜனநாயகம் எரியும் சிறீ லங்கா 
 16,
தன் பசி போக்க 
மனித ஊனம் குடிப்பவன் 
காட்டிக்கொடுப்பவன் / துரோகி 
17, 
பிரபாகரனே மறுத்த 13 ஆம் திருத்தத்தை 
கூட்டமைப்பிற்கு ஏனாம் : கோத்தா 
வடை காகத்திடம் நரி பாட்டுக்கேட்டது 
 18,
கண்ணுக்குத் தெரிந்ததால் 
சூரியனை கும்பிடுகிறார்கள் 
கண்ணுக்குத் தெரியாமல் 
காற்று எமக்காய் உழைக்கிறது 
நிழல் கரும்புலிகள் 
 19,
நாடோ,சிறையோ எங்கிருந்தாலும் 
உயிருக்கு உத்தரவாதமில்லை 
மகிந்த சிந்தனை 
 20,
எறும்புகள் காவும் சுமையை பார் 
"ஒன்றானால் பலமாவோம் "மனம்  சொல்ல 
கோவிலில் தேங்காய் சிதறுகிறது 
 21,
இடியப்ப பின்னலையும் 
சிலந்திவலை பின்னலையும் 
சிக்கெடுக்க மனம் அலைகிறது 
கைகள் பின்னால் கட்டி 
சுட்டு வீழ்ந்து கிடக்கிறான் போராளி 

 22,
மரமாய் வளர்த்து 
விறகாய் எரித்தார்கள் /
ஈன்ற குட்டியை தின்கிறது 
குட்டி ஈன்ற நாய் 
ஈழமும் இந்தியாவும் 
 23,
நட்டாற்றில் கைவிட்ட ஐ நா - இன்று 
மரண அறிக்கை தருகிறது 
இதயம் பிய்த்து பூ செய்தல்

 24,
 மீனைப்போல நீந்த கற்ற மனிதன் 
பறவை போல பறக்க விரும்புகிறான் 
ஆசைக்கு கடிவாளம் இல்லையா?

 25,
 உலக மொழி
ஓவியமா?மௌனமா?
மழலை மொழி
 26,
இலங்கையில்
தினமும் பதினொரு பேர் தற்கொலை
ஆசியாவின் அதிசயம்
 27,
ஐரோப்பாவில்
எம்வாழ்வு தங்கியிருப்பது  
குளிர்சாதனப்பெட்டியில்.
28, 
வாழ,கடன்குடுக்காதவர்
தற்கொலை செய்தபின் வருந்துகிறார்
சுடலைஞானம்
 29,
மனித இடைவெளி அதிகரிக்க
மனிதன் அதிகம் சிந்திக்கிறான்
இடைவெளி குறைய
சிந்தனை மறந்து அதிகம் கதைக்கிறான்
போரும் சமாதானமும்
 30,
ஒரே சூலில் பல உருவாக
ஒரே புதைகுழியில் பல உடலங்கள்
உலகமும் முள்ளிவாய்க்காலும் 
31, 
விடுதலை பெற துடிக்கும் நாடுகளை
அழிக்க,உலகம் வைக்கும் பொறி
பேச்சுவார்த்தை
 32,
தென்றலும் புயலுமாய்
மனம் தொடும் காற்று
நினைவுகள்
 33,
உலை கொதிக்காத வீட்டில்
கொதிக்கும் வாழ்வு
ஏழ்மை
 34,
விடிவெள்ளியை விட்டு
குப்பி விளக்கை நம்பு
அரசனும் புருசனும்
35, 
முட்டையிடாமல்
கொக்கரிக்கும் கோழிகள்
விமர்சகர்கள்
 36,
கானல் நீரில்
ஓடும் மீன்
கற்பனை
 37,
மனசு சருகாகி எரிய
குளிர் காய்கிறது அயல்
பெரு மூச்சு
 38,
ஒரு முட்டைக்கே கோழி கொக்கரித்தது
ஆமை அப்படியல்ல
அரசியல்வாதியும் போராளியும்

 39,
வீட்டுக்கு வெளிச்சம் வந்தது
நீண்ட நாள் வேயாத கூரையால்
தண்டச்சோறு
 40,
கன்றுடன் பசுவை விழுங்கிற்று
மலைப்பாம்பு
சாட்சியற்ற யுத்தம்
 41,
தாயில்லை,பிள்ளையில்லை
கவலையாயிருந்தது
குடும்பமே இல்லை
நிம்மதியாயிருந்தது
42, 
யுத்தத்தை மனிதரில் ஏவினான்
துறவி
எரிந்தது காவி
சாம்பலாய் குருதி
 43,
இலங்கையில்
புனர்வாழ்வு யாருக்குத்தேவை?
புண்ணை விட்டு மருந்துக்கா?
கோத்தாவுக்குத்தானே 
 44,
கவனம் !
எந்நேரமும் கலையலாம் குளவிக்கூடு  
அரச கூட்டணி
 45,
உண்ணமாட்டார் என்பதால்
இறைவனுக்கு படைக்கிறார்கள்
ஏங்குகிறார்கள் பிச்சைக்காரர்கள்  
 46,
மிதப்பவன் மூழ்குவான்
குடிகாரன்
மூழ்கி மிதந்தது பிணம் 
 47,
சுகம் வரும்
ஆள் தப்பாது
அமைதிப்பேரணியில் கலவரம்
 48,
வாக்களித்த
விரல் பூச்சு அழிந்ததும்
எம் பியை காணோம்
 49,
கௌரவமான பிச்சை
வரதட்சணை
பிணத்திற்கு கூச்சமில்லை
 50,
உடையாத கண்ணீர்த்துளி
இலங்கை - அதில்
உறையா குருதித்துளி
ஈழத்தமிழன் 
 51,
பாலில் கலக்கும்
ஒரு துளி நஞ்சாய் துரோகம்
கூட இருந்து குழிபறித்தல்
 52,
அம்மாவின் பிள்ளை மீதான பாசம்
ஆவியைப்போன்றது
இறப்பு இல்லாதது
 53,
விலங்கிலிருந்து
மனிதன் கூர்ப்படைந்தானா?
வரதட்சனைக் கொடுமை 
 54,
வயிறை படைத்த 
கடவுளை கோவித்தான்
ஏழைச்சிறுவன்
நாயிற்கு
இறைச்சி வாங்காத கணவனை
விவாகாரத்து செய்தாள்
வெள்ளைக்காரி
 55,
  உன்னை நீ அறிவாய் !
யார் எதை அறிந்தார்?
ஒரே ஒரு வெற்றிடத்திற்கு
ஆயிரம் பேர் கால் கடுக்க நிற்கிறார்   
 56,
மூலகாரணியை தீர்க்காமல்
இனப்பிரச்சனை எப்படி தீரும்?
ஓட்டைவாளியில் நீர் நிரப்பல்
 57,
பறவைகள் தலை பணிந்தே
உயர உயர பறந்தன
பணிவு நிமிர்வு தரும்
 58,
வேரின் வாசம்
பூக்களில் இருப்பதில்லை
முதியோர் இல்லம்
 59,
மூடப்படாத புதைகுழிகள்
வரவேற்கின்றன
பாதுகாப்புவலயம்
 60,
வாழு வாழ வழிவிடு
இறைஞ்சினர் தமிழர்
பரிசு இனப்படுகொலை  
 61,
தானே குழிவெட்டி
வரலாற்றில் வீழ்ந்து சாவான்
மாதாளமுத்தா
 62,
மத்தாப்பு பூத்தபூவா?
பூமரம் பூத்தபூவா அழகு?
காலத்தை தின்கிறது மிருகம்
 63,
எரியப்போகிறது
இறந்த காலம்
சுடலையில் பிணம்
 64,
உன் பிறப்பை தாய் அனுபவித்தாள்
உன் சாவை நீ அனுபவி
கேட்காமல் கிடைத்த வரம்
 65,
வைக்கோல் மாடுகளுக்கு
பொங்கல் விழா
சாமர்த்திய வீடு
66,
புள்ளியே விரியும்
சாதிக்க நேரம் ஒதுக்கு/செதுக்கு
முயலாதவன் இயலாதவன்
 67,
மரங்கொத்திப் பறவையின்
கொத்தும் சத்தம் கேட்கிறது
மரம் அழும் சத்தமோ?
யுத்தம்
 68,
மாதம் முழுக்க உழைத்தாலும்
சம்பள நாளில் திக்குமுக்காடுகிறது மனம்
பிரசவ வேதனை
 69,
வாழ்வின் வலியும் உறவின் பிரிவும்
புரிந்தது
தொப்புள் கொடி வெட்டப்படுகையில்
 70,
மூடி மூடி திறக்கும் சோடிக்கதவு 
மனத்தால் படபடக்கும் பட்டாம்பூச்சிகள்
கண்ணிமைகள்  
 71,
நண்பனை மட்டுமா?எதிரியையும்
மறக்கமுடிவதில்லை
நெல்நாற்றையும் புல்லையும் மேயும் மாடு
 72,
மரணதண்டனைக்கு எதிராய்
திரள்கிறது உலகம்
தூண்டில் மீனை தின்றபடி
 73,
உதிரும் பூக்கள் மலர்கின்றன
எய்ட்ஸ் தாயிற்கு   
பிறக்கும் பிள்ளைகளைப்போல
 74,
"பெண்களின் கூந்தலுக்காயும்
மலர்கள் புடுங்கப்படுகின்றன
மரத்தின் வலி அறியாமல் "
காணாமல் போனவனின் தாய்
 75,
 வயோதிப காலத்தில்
காணமுடியா பிள்ளைகளின் கல்லறைகளை,
பிள்ளைகளை,தேடித்துவளும் எழுதாதபாடல்கள்
 கை அசைக்கும் உயிரின் வலி     


Share/Save/Bookmark

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக