வியாழன், 4 மார்ச், 2010

உண்மைக் கதை - 02

2009, ஜனவரி மாதம் வன்னியின் மகிழ்வான காலங்கள் படிப்படியாக மூட்டை கட்டித் தூக்கிப் போகப்படுகின்றன. எங்கு பார்த்தாலும் சோகம் அப்பிய முகங்களும்இவ்வளவு காலமும் சேர்த்துழைத்த சொத்துக்களை  இடம்பெயர்வோடு எடுத்துச்செல்லும் முயற்சியும் தான்.ஸ்ரீலங்கா இராணுவம் உடையார்கட்டுக் குளத்திற்கு அருகில் வந்துவிட்டதாகச் செய்தி.செல்மழை உடையார்கட்டு சன நெருக்கடி மிக்க பகுதியை சதா
பதம் பார்த்த படி இருந்தது. 


அதிலும் குறிப்பாக உடையார் கட்டு பாடசாலையில் இயங்கும்  கிளிநொச்சி மருத்துவமனையைச் சூழவும் அதற்குள்ளும் செல்லடி மையம் கொள்கிறது. உடையார்கட்டு பாடசாலையோ மிகக்கடினமான முயற்சியில் ஓரளவு   இயங்கக்கூடிய மருத்துவமனையாக மாற்றப்பட்டிருந்தது. காயப்பட்ட மக்களை  றக்டரிலும், வாகனங்களிலும் கொண்டுவந்து கொண்டிருத்தார்கள். சத்திர சிகிச்சைக் கூடம் முனைப்புடன் இயங்கிக்கொண்டிருந்தது. அன்றைய தினம் வந்த காயப்பட்டவர்கள் அனைவருக்கும் சத்திர சிகிச்சை செய்து முடித்து வெளிவரத் தயாரானோம்.சத்திரசிகிச்சை கூட வாசலுக்கருகில் மோட்டார்சைக்கிள்  ஓன்று வந்து நின்றது. மோட்டார்சைக்கிளை ஒருவர் ஓட்டிவர, பின்னிருந்தவர்  ஒரு பதினெட்டு வயது பெண்பிள்ளையை கிடத்தி வைத்திருந்தார். பெண்பிள்ளையின் தலையில் பாரிய காயம். உடனே சத்திரசிகிச்சை கூடத்தின்  முன்னமைந்திருந்த அனுமதி விடுதிக்குள்  அந்த நோயாளியை கொண்டுசெல்லுமாறு நான் பணித்தேன் என்னையும் அனுமதி விடுதிக்குச் சென்று அந்த நோயாளியைப் பார்க்குமாறு எனது பிரதான மருத்துவர் கட்டளை யிட்டார். நான் எனது சத்திர சிகிச்சை கூட உடையை மாற்றிக்கொண்டு அனுமதி விடுதிக்குப் போனேன். அனுமதி விடுதி மருத்துவர் அன்நோயாளியைப் பார்த்து விட்டு வாசல்  பக்கமாய் வந்தார். என்ன மச்சான்,எப்படி? என்று வினவ, அது போயிட்டுது மச்சான் என்றான் அலுத்தபடி .ஓகேடா  என்று திரும்பியவனுக்கு ஒரு தாய் கத்திக் குளறிக்  கொண்டு வந்தது உணர்வைத் திசை திருப்பிற்று. 

எனக்கு அந்த தாயை நன்கு தெரியும். 2006 ஆம் ஆண்டு  பத்தாம் மாதம் செஞ்சோலை வளாகத்தில் ஸ்ரீலங்கா இராணுவ விமானங்கள் இலக்கு வைத்து தாக்கியதில் காயமடைந்திருந்த மாணவியின்  தாய் .திரும்பி இறந்து கிடந்த பிள்ளைப் பார்த்தேன். ஆம்  ஒரு கால் இல்லைத்தான்.இந்தத் தாயின் பிள்ளைதான். அந்தத் தடவை இந்தப் பிள்ளையைக் காப்பாற்ற என்ன பாடுபட்டோம். ஒரு கால் சிதைந்த படி வயிற்றிலும் பாரிய காயத்துடன் வந்திருந்த அப்பிள்ளையை வேகமான சத்திர சிகிச்சையில் நான் எனது பிரதம மருத்துவர் உள்ளாக இரத்தம் கொடுத்து அப்போது இப்பிள்ளையை எழுப்பினோம். இந்தத் தாய் எமது வாயால் இனி இந்தப் பிள்ளைக்கு ஆபத்து இல்லை என்று சொல்லும் வரை சாப்பிடாமலே கிடந்தாள். எனது பிள்ளைக்கு ஏதாவது என்றால் நானும் போயிடுவன். என்றபடியே ஒருகிழமைக்கு மேல் உணவற்றுக்கிடந்தாள். இந்தப் பிள்ளை தாயிற்கு ஒரே பிள்ளை.இந்தத் தாயின் கணவன் ஒரு பேக்கரியில் பாண் கட்டி கடைகளுக்குப் போடும் வேலையைச் செய்திருந்தான். 1989  ஆம் ஆண்டு ஒரு அதிகாலையில் பேக்கரியிலிருந்து சைக்கிளில் பாண் கட்டிப் போகும் போது இந்திய இராணுவம் சுட்டு அவன் மடிந்தான். அன்றிலிருந்து வீடு வீடாய்க் கூலிக்குப் போய் கிடுகு பின்னி விற்று இந்தப் பிள்ளைதான் உலகம் என வாழ்ந்தாள்.

. பொ. சாதாரண தரத்தில் நல்ல பெறுபேறுகளைப் பெற்று உயர்தரம் படிப்பதையும்  அப்போது சொல்லியிருந்தாள். பிள்ளையின் உடல் ஓரளவு குணமாயிருந்த வேளையில், பிள்ளையிட்கு இனி சாப்பாடு கொடுக்கலாம் என்று சொன்ன அன்று தான் வீடு போய் இடியப்பம் அவித்து வந்திருந்தாள். பிள்ளையை சாப்பிடு என்று ஊட்டிவிட, இல்லை நீங்கள் முதலில் சாப்பிடுங்கோ என்று பிள்ளை அடம்பிடிக்க, கடைசியாக பிரதம மருத்துவரே வந்து இருவரையும் விடுதிக்குள் சாப்பிட அனுமதி கொடுத்தார்.   

பிள்ளைக்கு வலது கால் முழங்காலுக்குக் கீழ் இல்லை.அம்மா காயம் எல்லாம் மாறின பிறகு பொய்க்கால் போடலாம் .பொய்க்கால் போட்டால் எல்லா வேலையும் செய்யலாம்  என்றபடி எனது காலைக் காட்டினேன். பாவம்  அந்தத் தாய்  அப்போதுதான்  எனக்கும் கால் இல்லை என்பது அந்தத் தாயிற்கு தெரிந்தது.தாயின் கண்களில் நீர் பணித்திருந்தது.தம்பி என்ற பிள்ளைக்கு கால் இல்லாட்டிப் பரவா இல்லை.நான் தூக்கிப் பார்ப்பன்.என்ர பிள்ளையை நான் அப்படித்தான்  வளர்த்தனான். தம்பி, தம்பி என்ற அந்தத் தாயின் சத்தம் என்னை நிஜ உலகிற்கு திருப்பிற்று. 

தம்பி, தம்பி என்ரை பிள்ளைக்கு எப்படி இருக்கு? ஒருக்கா பாரடா மேனே. நான் இந்த தாயிற்கு என்ன  சொல்வது? எப்படி சொல்வது? உனது பிள்ளை இறந்துவிட்டதாக. தம்பி என்ர பிள்ளை கம்பசிக்கு எடுபட்டிட்டால். பிள்ளை படிச்சு வந்தால் இனியாவது  சந்தோசமாய் வாழலாம் என நினைச்சன்.  பெரிய டாக்டரை ஒருக்கா  கூட்டி வந்து காட்டு மேனே. கடவுளே மருத்துவ வாழ்க்கையில் கடின உழைப்பு மனதை கஸ்டப்படுத்தாது. ஆனால் இந்த தர்மசங்கடமான நிலை எதிரிக்கும் வரக்கூடாது.பிரதம மருத்துவரைக் கூட்டி வரலாம். ஆனாலும் பாவம் அவரின்ட மனநிலை உடைந்து போறதும் நல்லதில்லை. தொடர்ந்தும் காயங்கள் வரும்.என்றாலும் இந்தத் தாயை சமாளிக்க முடியாது.பிரதமமருத்துவரைக்கூட்டிவர முடிவுசெய்தேன். அவர் வரும் போது  என்ர பிள்ளையைக் காப்பாற்றுங்கோ காப்பாற்றுங்கோ என்று அவர் காலில் விழுந்து அழுதாள். பொறுங்கோ அம்மா என்றபடி சென்று பிள்ளையை பரிசோதித்தார். திரும்பினார். காப்பற்றுங்கோ என்ற 
அலறலுக்குப் பதிலாய் கண்ணீர் வழிந்தது. 

-- நிரோன் --


Share/Save/Bookmark

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Bookmark and Share