சனி, 20 மார்ச், 2010

அரச பயங்கரவாதமும் சில பெறுபேறுகளும்.

பதினைந்து  வயதில் 
எழுதப்  பழகுகிறாள் 
எழுதிய கையில்லாததால்.

துரு துரு கண்களால் 
உற்று உற்றுப் பார்க்கிறாள் 
காதுகள் கேட்காததால்.  


சிறு வயதில் 
தவளைப்   பாய்ச்சலில் 
முதலாவது-  இன்று 
தவளையைப்  போல் 
தத்தி தத்தி வருகிறான் 
கால்கள்  இல்லாததால்.

சங்கீத வகுப்பில்க்கூட 
வாய் திறந்து பாடாதவள் 
யாரும் கேட்காமலே 
சினிமாப் பாட்டு பாடுகிறாள் 
சித்தம் கலங்கிப்போய் .  

வீட்டின்  விடிவிற்கே
பாதை  திறந்தவனை 
கை பிடித்து போகவேண்டி இருக்கிறது.   
பார்வை  இழந்ததினால்.

கல்யாணப்  பேச்சு 
கட்டிய வீட்டுடன் 
முற்றுப் பெற்றிருந்தது.
வீடு இல்லை 
கட்டிய மனக்கோட்டைக்களும்தான்   
பள்ளிக் கூடம்,
வாசிக சாலை,
மருத்துவமனை,
வீடுகளில்க் கூட 
ஒரு பொருளும்  மிச்சமில்லை.
ஒரு புத்தகம் கூட இல்லை.

எங்கட  டீச்சர் வந்தாதான் 
நான்  படிப்பன்.
டீச்சர் வரமாட்டா  குஞ்சு.
ஏன்?
சாமியிட்ட போயிட்டா.
யாரை யார்  தேற்றுவது?   

இரத்தத்தை  வியர்வையாக்கி 
கட்டிய வீடு பார்க்க வந்தவன் 
மூன்றாம் நாள் கிணற்றிலிருந்து.

முற்றம்  இல்லை.
வீடிருந்தால் தானே முற்றம்.
ஏன் முற்றம் ?
விளையாடப்  பிள்ளை இல்லையே.

புத்தபகவானின் தந்தை 
ஒரு இந்து -இங்கு 
இந்து சாமியை தூக்கி விட்டு 
புதபகவானை  வைக்கிறார்கள்.

கட்டிடங்களை  உடைத்து,
கல்  எடுத்து,
கட்டிடம் கட்டுகிறார்கள் 
இராணுவ ஒப்பந்தகாரர்கள்.

மாடி வாழ்வு 
வாழ்ந்த மக்கள் 
அத்திவாரமற்று  நிற்கின்றனர்.

புரியாத மொழியும்,
அகங்காரமும்,
ஆக்கிரமிப்புச் சின்னங்களும் 
அமைதி பூமியை புண்படுத்துகின்றன.  

இன்னும்  மீள்குடியேற்றம் 
அரைவாசிகூட  இல்லை 
பொருட்கள் 
சூறையாடி முடியாததால்.

அரசசார்பற்ற  நிறுவனங்கள் 
மனிதாபமான    உதவிகளை 
அரசு   அனுமதித்தால்த்தான் செய்யலாம்.
கீ--கீ--கீ.   
உயிர்மனிதர்தான்  இல்லை 
அல்லது 
இருந்தும்  இல்லைஎன்றால் 
புதைகுழிகளையும் 
கிளறுகின்றன  பச்சைப் பிசாசுகள்.

புலிகள் இல்லையாம் 
குளிர்விட்டுத்  திரிகின்றன 
பனங்காட்டு  நரிகள்.

ஆடு  சாப்பிட்டு,
மாடு சாப்பிட்டு,
மனிதனைச் சாப்பிட்டு,
இப்ப 
மண்ணைச்  சாப்பிடுகிறார்கள்.

எல்லாம் சகஜமாயிற்று.  
ஒரு பிரச்சனையும்   இல்லை 
அரச ஊதுகுழல்கள்.

போர்க்குற்றம்  துளியும் 
செய்யவில்லையாம்- பின்  ஏன்?
சர்வதேச விசாரணைக்கு   தயக்கம்.


Share/Save/Bookmark

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Bookmark and Share