வெள்ளி, 5 மார்ச், 2010

மனதின் பாடல்

2010 பிறக்கிறது.
ஐரோப்பா
சில தசாப்தங்களுக்குப்  பின் 
அசாத்திய பனிமழை, அதிக குளிர்.
பால் போல வெள்ளை என்பவர் 
பனிமேடுகளைப்  பார்க்காதவர்.
நீலம் போட்டு வெளுத்த வெள்ளை.
மனதில் இல்லாக் குளிர்மையை 
இயற்கை தருகிறது போல. 



பல வருடங்களுக்குப் பின் 
அதிசய சூரிய கிரகணம். 
அதுவும் எமது பகுதிகளில்.
பாரதக் கர்ணன் இறந்த போதும் 
இதைப் போல இருந்ததாம்.

தாயகத்தில் 
பால்ய நண்பன்  சந்துரு வீரச்சாவு.
தாயிடம் படம் கூட இல்லை.
மல்லாவி 
பற்றைகளுக்குள் மீள்குடியேற்றம்.
யாருமற்று என்ன செய்வா?
மீண்டும் 
வீடு வீடாய் கூலி வேலை?
அல்லது  தோட்டம்?

நுளம்பு, பாம்பு,
துப்பாக்கி   ஏந்திகளோட 
எதுவுமற்ற வாழ்வு 
எப்படி வளரப் போகிறது?  

மானஸ்த்தனை  அல்லது 
வீரனைப்  பெற்றதே 
அந்த தாயிற்கு போதுமாய் இருக்கலாம்.
முற்றுப்புள்ளி இல்லா தியாகம்.

தாயை தண்ணி கிள்ள விடாதவன் .
கடைக்குப் போக விடாதவன்.
எங்க போயிருப்பான்?
ஆவியாய்  அங்கு தான் சுத்துவான்.

சின்னனில 
பேயிற்கு பேய்ப் பயம். -இப்ப 
அவன் அப்படி வந்தாலும் 
கட்டிப் பிடிக்க ஆசையாய் இருக்கு.     

விஞ்ஞான  உலகிலும் 
மனம் குரங்காய் அலைகிறது.
கத்தி  அழவேணும்
போல இருக்கு, முடியல.

என் பிள்ளைக்கு 
சந்துருதான் பெயர் - என் அம்மாவிற்கு 
அவனில  கொள்ளைப்பிரியம்.
சுவரில தொங்கும் நண்பனின் படம்
பழையதைக் கிளறுது. 
  
விரும்பிய கல்யாணம். 
சீதனம் வாங்கவில்லை.
மனைவி,பிள்ளை, வசதி, வாழ்வு.
இருந்தும் 
ஒன்றாய்  நின்றிருந்தால் 
வென்றிருக்கலாம். 
பேரன், பூட்டன்ர பேரில
நாங்கள் வாழ இல்லை .
எங்கட உழைப்புத்தான்.
சாதாரண  பிறவிகள்.
என்ன  செய்யிறது. . 

கை, காலுக்கு உறை,
கழுத்துக்கு வேறு,
தலைக்கு தொப்பி.
ஒன்றுக்கு நாலு உடுப்பு.
என்ன வாழ்வு.

கண்களை விட்டிட்டு 
இமைகள் ஓடாது.

கையிற்கு கிடைத்த 
நண்பனின்  வாசகம்.
வடை வாய்க் காகத்திடம் 
நரி பாட்டுக் கேட்டது.
சமாதானப் பேச்சு வார்த்தை. 

நெஞ்சில குண்டேந்திய 
இறுதிக் கணத்தில் -----
தாயிற்காவது
ஏதாவது சொல்ல விரும்பி இருப்பான்.
அம்மா அடுத்த பிறப்பில் 
உனக்குத்தான் பிள்ளையாய்ப் பிறப்பன்
என சொல்லத் துடித்திருப்பான். 

இன்றைக்கும் 
பஞ்சு துகள்கள் போல 
பனி மழை  கொட்டுது.
கொட்டிலாலென்ன ?விட்டாலென்ன? 

-சுருதி-



Share/Save/Bookmark

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Bookmark and Share