சனி, 3 ஏப்ரல், 2010

ஓ நாளைமறுதினம் உயிர்த்த ஞாயிறு

 எங்கள் கண்ணீரில்
கை,கால்,முகம் எல்லாம்
கழுவுகிறார் சிங்களர்.

ஒன்றுமில்லாது
ஒதுங்கிக் கிடப்பவரை
வேடிக்கை பார்க்க
தெற்கில் இருந்து
தினம் வருகிறது
மக்கள் கூட்டம்.
காயத்திற்கு
மிளகாய்த்தூள் தடவுவது போல்.



ஏதிலிக்குக்கூட
அடையாளம் இருக்கும்
இறந்தவர் பலருக்கு
வைக்க படம்கூட இல்லை.
தெரிந்தவர்
யாரும் கீறித்தருவீர்களா?
பாரத்தோடு ஊசலாடும் மனதை
தொட்டு
சமாதானம் வந்திட்டுதாம்.
எல்லா பிரச்சனையும் முடிஞ்சுட்டுதாம்.
வாக்குப் போடட்டாம்.

ஒரு படத்தில்,/சீரியலில் கூட
காதல் பிரிந்திடக் கூடாது,
சோகமுடிவை
விரும்பா மனங்களுக்கு
உண்மை வாழ்வு இப்படியாயிற்று.

கொன்றவனே
செத்த வீட்டிற்கு
ஆறுதல் சொல்லவரும்
அகால பொழுதிது.

கடலில் தத்தளிக்கும் போதும்
கல்லைக் கட்டிவிடும் அயல்நாடு
தமிழரே -உமக்கு
தத்திளிக்கும் போது மிதவை
நம்பிக்கை மாத்திரமே.

துயிலுமில்லங்களில் இருந்து
எலும்புகளைக் கிளறி எடுக்கும்
நரமனிதன்
எல்லோரும் சமமென இளிக்கிறான்
கோரப் பற்களால்.

வாயிற்கு அரிசி போட்டு
ஊர் மேயும் அரசியல்.
திக்கற்றவனுக்கு உதவா
வக்கில்லாப் பாசம்.

அரசமரத்தை
மகிந்தன் கொண்டுவந்தான்.
அசுரமனதால்
மகிந்த கொன்று குவித்தான்.
மதமும் மதங் கொள்ளுமா?

போராளிகளை
பயங்கரவாதிகளாய்
முத்திரையிடும்
கொடும் அரக்கவாதம்.

உண்மை,போலிகளை
பகுத்தறியா பகுத்தறிவு.

பணத்திற்காய்
வாய் திறக்கும்/மூடும்
வாழும் பிணங்கள்

உரியவன் இல்லையெனில்
எல்லாம் ஒருமுழம் கட்டைதான்.

இனம்,மொழி,மதம்
பாகுபாடு -இதை
மனிதம் ஏற்காது.
தாய்,தந்தை,
மனைவி,பிள்ளை,
சமூகம்,
வீடு,நாடு
இது தனித்துவமானது.

இன்று பெரியவெள்ளி
இயேசுபிரான்
தேவதூதன்
கல்வாரியில்  மரணித்த நாள்
யூதாஸ்கள் இன்றும்
இருக்கிறார்கள்.
சிலுவைச் சுமையைப் பகிர
இன்னும் சீமோன்களும் இருக்கிறார்கள்.
 ஓ நாளைமறுதினம் உயிர்த்த ஞாயிறு

-சுருதி-
 

   
            


Share/Save/Bookmark

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Bookmark and Share