செவ்வாய், 13 ஏப்ரல், 2010

காற்றினில் செல்லும் புலம்பல்

அப்பா அம்மா
மனைவி பிள்ளைகள்
வீடு சமூகம் இனம் என்ற
கட்டுக்கோப்புகள்
மணல்வீடு ஆகிடுமா?

வனம் கூட அழியாமல்
காவல் காத்த தெய்வங்கள்
எங்கே?
நாடு,மக்கள் என்று
துளியும் சுயநலமற்ற
மாவீரர் அவர்
சுவடுகள் எங்கே?

ஆசையாய்,அன்பாய்,
ஒரு கூடாய்
வாழ்ந்த வாழ்விழந்து
அனாதையாய்
அந்நிய தெருக்களில்
அந்தரிக்கிறது
அற்ப மனசு.
இயங்க மறுக்கிறது
தேய்ந்த உடல்.
தெருநாய்களை விட
மோசமாய்ப் போயிற்று
குஷ்டரோக வாழ்வு.

நம்பிய இனத்தை
நட்டாற்றில் விட்டு
நரபலி போகிறது ஆத்மா.

ஒரு இனமாய்
ஒன்றுபடமுடியாமல்
ஒவ்வொரு கட்சியாகிறது இனம்.
மேய்ப்பன் அற்று
ஆடுகள் அங்கும் இங்குமாய்
அலைக்கழிகின்றன.

பச்சைப்பிள்ளை கூட
நித்தம்
தீ மிதிக்கிற வாழ்வு.
வாய்க்கரிசி போடும் அரசியல்.
அடிவருடிகள்
குழம்பிய குட்டைக்குள்
மீன் பிடிக்கிறார்கள்.
மரணித்த மாரித்தவளையாய்
பிரண்டு கிடக்கிறது இனம்.

ஆற முடியாச் சோகம்
மீள இயலா இழப்பு
சிலுவை சுமக்கும் நினைவு
வாழ வேண்டிய பொறுப்பு.

மரணம் வாழ்வின் முடிவல்ல .

தர்மம் தோற்பது போல் வெல்லும்.

-சுருதி-

 


Share/Save/Bookmark

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Bookmark and Share