வெள்ளி, 9 ஏப்ரல், 2010

விடுதலையும் காதலைப் போல

இன அழிப்பு
அல்லது இனச்சுத்திகரிப்பு
இனக் கலப்பு
நிலப்பறிப்பு
ஈழத்தமிழரை
இல்லாதாக்கும்
சிங்களக் கனவு நனவாகுமா?
கோடரிக்காம்புகள்,
விலாங்கு மீன்களுக்கு
என்ன நடக்கும்?
வாழும் உரிமைதான் போகிறது
வாழ்ந்த அடையாளமுமா?அன்று அமெரிக்காவில்
பேருந்துகளில்க்கூட
கறுப்பினத்தவருக்கு
அடிமைகளுக்கான
தனியான இருக்கைகள்.
கறுப்பினத் தலைவர்
மார்டின் லூதர் கிங்
வெள்ளையனால்
சுட்டுக்கொல்லப்பட்டார்.
இன்று
வெள்ளையராலேயே
தமது தலைவராக
கறுப்பினத்தவர் தெரிவானார்.

முயற்சி உடையார்
இகழ்ச்சி அடியார் .
அடம்பன் கொடியும்
திரண்டால் மிடுக்கு.
அடிமேல் அடி அடித்தால்
அம்மியும் நகரும்.
எல்லாம்
புத்தகங்களில் மட்டும் தானா?

வீட்டிற்கு மட்டும் தான் வேலியா?
நாட்டிற்கு இல்லையா?
இருப்பதும்
இல்லாமல் போவதும்
எங்களில்த்தான் இருக்கிறது.
பூனை கண்ணை மூடித்தான்
பால் குடிக்குமா?

விரைவு வாகனத்தை
திடுதிப்பாய் மறிக்கும்
போலிஸ்காரனைப்போல
காதல் வரும்.
விடுதலையும் அப்படித்தான்
தவிர்க்க முடியா தும்மல்.

-சுருதி-


Share/Save/Bookmark

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக