ஞாயிறு, 18 ஏப்ரல், 2010

அம்மா அது உனக்குப் போதும்

தாயை திருப்பி
அனுப்பியது இந்தியா.
படுக்கை,
பக்கவாத நோயாளிக்கு
வர விசா வழங்கி
வந்த பின்
திருப்பியது இந்தியா
வெந்தது ஈவு,இரக்கம்.



மனதாலும்
துளி அளவும் குற்றம் நினையா
மூதாட்டியின்
மருத்துவத்தை மறுதலித்தது
அன்னை திரேசா வாழ்ந்த
எம் அன்னை பூமி.

உலகில்
பெரிய சனநாயக நாடு
பெரும்
புருட்டஸ் நாடாகிறது.

பத்துக் கோடித் தமிழர்கள்
பத்து மூலையில் இருந்தென்ன.
பகடைக் காயாய் உருட்ட
சகுனிகளும்,கைக் கூலிகளும்
பலசாலியாய் இருக்கிறார்களே.

வங்கக் கடலில்
நாளும் தமிழர் வதைபட
கண்மூடிப் பால் குடிக்கும் இந்தி
தன் சினிமாத் திருவிழாவை
கொண்டாடுகிறது சிங்களத் தீவில்.

தமிழர்களை
எள்ளளவும் தம்மவராய்
நினைக்கவில்லை பாரதம் -அதை
மீண்டும் செப்புகிறது தன் மொழியில்.
இருந்தும்,இன்னும்
இந்தியாவை
கை எடுத்துக் கும்பிடுகிறார் சிலர்
உடலில்
ஒரு துணி கூட இல்லாமல்.

களத்தில் எதிரிக்கும்
சிகிச்சை அளிக்கும் இனம்
அவமானப்படுகிறது
கருணை பிறந்த நாடு
இன்று இதயமற்றுப்போனதால்.

இந்தியாவை
இத்தாலி ஆள்கையில்
இந்திராவை நம்பியவர்
நட்டாற்றில் .

தாய் வாழ்ந்த பூர்வீக
வீட்டை இடித்தார்கள்.
தந்தையை
சிறையில்க் கொன்றார்கள்.

வாஸ்கொடகாமாவிட்கும்
வழிகாட்டியது
ஒரு தமிழன் தான்-வரலாறு.
வாழ்விடமற்று
வதையுறுகிறது
வந்தவரை வரவேற்கும் இனம்.

எரியும் வீட்டில்
பீடி கொளுத்துகிறது சிங்களம் .
எண்ணெய் ஊற்றிவிட்டு
பிடில் வாசிக்கிறது அயல்.

வீடுகளை அழித்து
கூரைத்தகடுகள் வழங்க,
உயிர் கால்களை எடுத்து
ஜெய்ப்பூர்
செயற்கைக் கால்கள் பொருத்த,
சுதந்திரத்தை எடுத்து
சுகமா?எனக் கேட்க
அருகில் தூதுவராலயம்.

இமயம் பெரிதானாலும்
மனட்சாட்சி சிறிதானாலும்
எது வெல்லும்?

வாழ எல்லாம் இருந்தும்
சயனைட் மாலையுடன்
திரிந்தான் உன்மகன்
அம்மா
அது உனக்குப் போதும்.

-சுருதி-


Share/Save/Bookmark

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Bookmark and Share