செவ்வாய், 5 ஜூன், 2012

ஒரு அநாதையின் விமான பயணம்

அவனுக்கு ஐம்பது வயதிற்கு கிட்ட இருக்கும்.
அவன் அவனது முன்னைய நிறையிலிருந்து ஒரு 
இருபது கிலோவாவது குறைந்திருப்பான்.அவன் இப்போது 
கட்டுநாயக்காவில் விமானத்தில் ஏறிவிட்டான்.அவனுக்கும் 
தான் கொலை வளையத்தில் இருந்து தப்பியதான உணர்வு 
வருகிறது.விமானம் புறப்பட அவனது கண்களும் குளமாயிற்று.
அவன் முன்பொரு தடவையும் விமானத்தில் வெளிநாடு 
போயிருக்கிறான்.அப்போது அவன் இயக்கம் அதிக 
கற்பனைகளோடு போனான்.நல்ல எல்லா விடயங்களையும் 
நாட்டிற்கு கொண்டுபோக வேண்டும் என்ற அவாவே அவனிடம் 
இருந்தது.அந்த நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்கு சென்று 
இருக்கும் படி தலைமை கேட்டது.அவனோ சாட்டுச்சொல்லி 
மூன்று மாதத்தில் தாய் மண்ணுக்குஓடிவந்தான்.மீண்டும் மீண்டும் 
வெளிநாடு செல்ல தலைமை கேட்டுக்கொண்டே இருந்தது.
அவனுக்கு தாய் மண்ணை பிரிய துளியும் மனமில்லை.இன்று 
தாய் மண் சொந்தமில்லை.வெளிக்கிடத்தான் வேண்டும்.
அவனால் என்ன செய்யமுடியும். 
அவனது இளமைக்காலம் முழுவதும் இயக்கப்பணி
செய்தான்.பயிற்சிக்காலத்தில் கூட அவனுக்கு என்று 
ஒரு பொறுப்பான பணி இருக்கும்.இயக்க வாழ்வில் 
அவனது அநேக இரவுகள் விழித்தே இருக்கும்.
எவ்வளவு சந்தோசமான வாழ்வாகினும் மனதினுள் சுமை 
ஒன்று அழுத்திக்கொண்டே இருக்கும்.ஆனால் அவன் 
புத்துணர்ச்சியோடு இயங்கிக்கொண்டே இருப்பான்.
நோய் நொடி என்றாலும் அவனுக்கு ஓய்வு இல்லை.    
இன்று அவனை கவலைகள் ஒன்றன் பின்
ஒன்றாக அழுத்திக்கொண்டிருக்கிறது.அவனோடு 
ஒன்றாக வாழ்ந்து பிரிந்துபோன அத்தனை உயிர்களும் 
இன்றுஅவனுக்கு சுமையாகப்போயிற்று.மிகுதி காலத்தை 
என்ன செய்யப்போகிறான்.
இரண்டு மாதத்திற்கு முன்பு ஒரு நாள் முள்ளிவாய்க்காலில் அவன்
கண்ணீர் விடவேண்டிவந்தது.அன்று அவனுக்கு ஒரு சிறு 
பிஸ்கட் பெட்டி நண்பன் மூலமாய்க்கிடைத்திருந்தது.
காயமேற்ற வந்த கப்பலில் வந்தவர்களால் அது கொடுக்கப்பட்டிருந்தது.
அவன் தனது வேலை முடித்து அருகில் இருந்த தரப்பாளுக்கு
அருகில் போய் அங்கு திரியும் சிறுவர்களைத்தேடினான். 
யாரையும் காணவில்லை.பங்கர்களுக்குள் இருக்கவேண்டும்.
ஒருவன் எத்துப்பட்டான்.அவனுக்கு பிஸ்கட் பெட்டியை 
உடைத்து ஒரு பிஸ்கட்டை கொடுத்தான்.பின் மளமளவென்று 
பிள்ளைகள் வந்தார்கள்.அவன் எதிர்பார்த்ததைவிட அதிக 
பிள்ளைகள் ஒவ்வொருவராய் கொடுக்க பெட்டி முடிந்தது.
அவனுக்கும் சந்தோசமாய் இருந்தது.சில நிமிடங்களில் 
ஒரு ஆறு வயது மதிக்கக்கூடிய சிறுமி அதைவிட சின்னப்பொடியனை
இழுத்துவந்தாள். மாமா எங்களுக்கு அவனுக்கு என்ன சொல்வது 
புரியவில்லை.அந்தப்பிள்ளைகளின் தாயும் தந்தையும் 
சில நாட்களுக்குமுன்தான் ஷெல் இற்கு பலியாகி இருந்தார்கள்.
தனது தம்பிக்காவது குடுங்கோ அவள் கெஞ்சினாள். அவனிடம் 
கொடுக்க எதுவும் இல்லை.அவர்களோடு அவனும் அழுதான்.      
இன்னும் சில மணிநேரத்தில் 
சிங்கப்பூரில் இறங்குவான்.சிங்கப்பூரில் யாரையும் 
அவனுக்குத்தெரியாது.இரண்டு ,மூன்று வெளிநாட்டுதொலைபேசி 
இலக்கத்தை தவிர அவனிடம் ஒன்றும் இல்லை.
தாயின் ஞாபகம் வருகிறது.அவன் வீட்டிற்கு மூத்த பிள்ளை .
அவன் வீட்டிற்கு எந்த உதவியும் செய்திருக்கவில்லை.
இருந்தாலும் தாய் அவனைப்புரிந்து கொள்வாள்.ஐம்பது 
வயதில் அவன் வெளி நாடு போய் அவனால் என்ன முடியும்?
இருபத்தைந்து வருடமாய் அவர்களதுவயல் விதைக்காமல் இருக்கிறது. 
தாய் பாவம் அநேகரின் தாய்களைப்போல .
சிங்கப்பூர் விமானநிலையத்தில் இறங்கி ஒவ்வொரு தடையையும்
தாண்டி வெளியில் வந்து ஒரு இருக்கையில் குந்தினான்.இந்த 
இருக்கையில் அவன் எவ்வளவு நேரமும் இருக்கலாம்எங்க 
போறதென்று முடிவெடுக்கும்வரை.விமானங்கள் வந்து இறங்கும் 
போதும் ஏறும் போதும் நெஞ்சு படபடத்து ஊரின் ஞாபகம் உயிரை 
எடுத்தது..

-நிரோன்-



Share/Save/Bookmark

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Bookmark and Share