திங்கள், 29 ஜூலை, 2024

நாங்கள் நினைப்பது எல்லாம் சாத்தியமாவதில்லை

26 .09 .2009 அன்று காலை நோர்வேயில் ஒரு அகதியாக வந்து இறங்கினேன். விமானநிலைய நடைமுறைகளை முடித்துவிட்டு வெளியில் வந்து தரிப்பிடத்தில் இருந்தேன். இன்று திலீபனின் நினைவுநாள் மதியம்வரையாவது எதுவும் சாப்பிடக்கூடாது என மனது சொல்லிக்கொண்டது. இலங்கையை விட்டு வெளிக்கிட முன் அப்பா அம்மா அம்மம்மாவையாவது ஒருமுறை பார்த்து வந்திருக்கலாம் என நினைத்தாலும் அடுத்தகணமே அது சாத்தியமில்லை , கையில் அடையாள அட்டை கூட இல்லாமல் அறவே சாத்தியமில்லை என்ற பதிலையும் சொல்லிக்கொண்டேன், இனி ஒரு போதும் அவர்களை சந்திக்கமுடியாமல் போகலாம். என்னோடு வாழ்ந்த பலரின் முகங்கள் எனக்குள் வந்து வந்து போய்க்கொண்டிருந்தது, விரக்தியின் எல்லையில் இருந்தேன் இருந்தாலும் எதற்கும் தயாராக வேண்டும் என்ற பழக்கப்பட்ட மனநிலையும் என்னிடம் இருந்தது. இனி யாவும் பூச்சியத்தில் இருந்து ஆரம்பிக்கவேண்டும், புதிய மொழியையும் அ, ஆவன்னாவிலிருந்து கற்கவேண்டும். அகதி அந்தஸ்து கிடைக்கவேண்டும். அந்த நாட்களை இப்போது நினைப்பது கூட கடினமாக இருக்கிறது. எனது வாழ்நாளில் எனக்கு பலர் பல்வேறுவிதமான உதவிகளை நான் அறிந்தும் அறியாமலும் செய்திருக்கிறார்கள், அவர்களுக்கு நன்றிக்கடனை இந்தப்பிறவியில் என்னால் செய்து முடிக்க முடியாமல் போய்விடக்கூடும். நாங்கள் நினைப்பது எல்லாம் சாத்தியமாவதில்லை


Share/Save/Bookmark

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Bookmark and Share