வெள்ளி, 20 டிசம்பர், 2024
திரும்பிப்பார்க்கிறேன்
மாத்தையா என்றும் சங்கேத மொழியில் மைக் அல்fவா என்றும் அழைக்கப்பட்டவர். இவருக்கும் எனக்குமான தொடர்பு நெருக்கமாக இருந்ததில்லை , தொண்ணூறுகளில் எங்களது பொறுப்பாகவும் இருந்தார்,அவரது பொதுச்சந்திப்புகளில் சந்தித்து இருந்தாலும் ஒருமுறை கூட மனம் விட்டு கதைத்ததில்லை . எண்பத்தியேழாம் ஆண்டு இந்திய இராணுவத்துடன் சண்டை தொடங்கிய நேரம் , யாழில் குளப்பிட்டி சந்திக்கும் ஆனைக்கோட்டைக்கும் இடைப்பட்ட பாதையில் மாத்தையா அண்ணை நின்று தாக்குதலுக்கான கட்டளை இட்டுக்கொண்டிருந்தார்.நான் இன்னுமொரு போராளியுடன் கதைத்துக்கொண்டிருந்தேன். அவர் கேட்டதின் பேரில் சைக்கிளில் ஏற்றிக்கொண்டுபோய் அவர் சொன்ன இடத்தில விட்டேன், போகும் போதும் அவர் ஏதும் கதைக்கவில்லை, என்னை அவர் அறிந்திருக்கவும் வாய்ப்பில்லை, அது ஒரு பதற்றமான சூழலும்தான்.
கொக்குவிலில் இருந்த முகாம் ஒன்றில் தனி சந்திப்பை முடித்துவிட்டு அண்ணையுடன் வெளியில் வந்தேன். அண்ணை சந்திப்பு கொட்டிலை நோக்கிப்போனார். சந்திப்பு கொட்டிலிலிருந்து மாத்தையா அண்ணை வெளியில் வந்தார் , என்னைக்கண்டவுடன் அவரின் முகம் மாறியதை அவதானித்தேன். பின் அவர் அண்ணையுடன் கொட்டிலுக்குள் போய்விட்டார்.
தொண்ணூற்றியோராம் ஆண்டு ஆனையிறவு சண்டை நேரம் நான் மருதங்கேணியில் எனக்குரிய கள மருத்துவக்குழுவுடன் நின்றிருந்தேன். சண்டைக்களத்திலுள்ள கள மருத்துவக்குழுவின் மருத்துவர் காயமடைந்து பின் அதை பிரதி செய்த மருத்துவரும் காயமடைந்துவிட்டார். நான் எனது மருத்துவக்குழுவில் இருந்த மூத்த மருத்துவப்போராளியிடம் எனது அணியை வழிநடாத்த சொல்லிவிட்டு அதை மேலிடத்திற்கு அறிவித்துவிட்டு ஒரு மருத்துவப்போராளியையும் அழைத்துக்கொண்டு நேரடி களத்திலுள்ள கள மருத்துவக்குழுவை நோக்கி செல்வீச்சுகளுக்கிடையில் போய்க்கொண்டிருந்தேன். குறிப்பிட்ட தூரம் சென்றுகொண்டிருந்தபோது மாத்தையா அண்ணையின் அறிவிப்பு வந்தது " அங்கு போவது பாதுகாப்பு இல்லை,நின்ற இடத்திற்கே திரும்பவும்" .
மாத்தையா அண்ணையிற்கு கீழிருந்த தாக்குதல் அணி பப்பா அல்fவா என்ற சங்கேத மொழியில் அழைக்கப்பட்டது. அந்த அணியிலிருந்த பலர் எனக்கு தெரிந்தவர்களாக இருந்தார்கள். மாத்தையா
அண்ணையுடனான எனது இறுதி சந்திப்பை நான் எழுதப்போவதில்லை.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக