புதன், 3 மார்ச், 2010

உண்மைக் கதை - 01

இது 2007
மன்னாரில்  விடுதலைப் புலிகளின்  கட்டுப்பாட்டுப்  பிரதேசமாக பெரியமடுதச்சனாமருதமடு, மடு, பண்டிவிரிச்சான், அடம்பன், ஆண்டான்குளம், பள்ளமடு, வெள்ளாங்குளம் வரை இருந்தது.சுமார் எழுபத்தையாயிரம் மக்கள் வாழ்ந்தனர். அப்பிரதேசத்தில் இராணுவத்திற்கும், புலிகளுக்கும் சண்டை உச்சமடையத் தொடங்கிற்று.அப்பிரதேச மருத்துவ மனையொன்றில் சத்திரசிகிச்சை கூடம் உருவாக்கப்பட்டது. அச்சத்திரசிகிச்சை கூடத்திற்கு பொறுப்பாக போராளி மருத்துவர் வாணன் நியமிக்கப்பட்டார். அவருக்கு தேவையான  புதிய மருத்துவப் போராளிகளும் இணைக்கப்பட்டனர்.



மருத்துவர் வாணனுக்கு சத்திரசிகிச்சை கூடத்தை உருவாக்கும் பளுவுடன் புதிய மருத்துவப் போராளிகளை தேவைக்கு ஏற்ப பயிற்று விக்க வேண்டியும் இருந்தது. இரவு பகலாக தொடர் கடமை ஓய்வை துறந்து இயங்கிக் கொண்டிருந்தது  மருத்துவமனை நித்தம் பத்துப் பேர் வரை பாம்புக் கடிக்குள்ளாகி  வந்து கொண்டிருந்தனர்.      


நீலனும்  ஒரு புதிய மருத்துவப் போராளியாய் பயிற்சியுடன் கடமையாற்றி வந்தான். மருத்துவர் வாணன் தனது கடமையில் விடாப் பிடியானவர். எப்படியாவது உயிர்களை காப்பாற்றி விடவேண்டும் என்பதிலும் போராட்டக்குணமுடையவர்.அவரது பயிற்சி புதிய போராளிகளுக்கு கடினமாகத்தான் இருக்கும்.நீலனின் சுறுசுறுப்பு வாணனுக்கு பிடித்திருந்தது. அதனாலும் அவனுக்கு வேலைச்சுமை அதிகம். பாம்பு கடித்து சிறிய குழந்த்தைகளிலிருந்து  முதியவர் வரை மருத்துவமனைக்கு கொண்டுவரப்படுவர். விஷப்பாம்புகள்  அதிகமுள்ள பிரதேசம் போராடி ஈற்றில் மருத்துவ மனையே வெல்லும்.   
  
மருத்துவர் வாணன் அவர்களுக்கு ஒரு கால் பொய்க்கால். ஆனால் அவரது கடமையில் கால் இல்லாதது தெரியவே தெரியாது .அதைக் காட்டிக் கொள்ளவும் அவர் விரும்புவதில்லை. அவருக்கு சரியான தொய்வு நோய் இருந்தது. மருந்து எடுத்தே கடமைக்கு வருவார். அவரது குடும்பம் கிளிநொச்சியில் இருந்தது. மாதத்திற்கு ஒரு நாள் அரிதாக வீடு சென்று வருவார். ஒவ்வொருவரின் கடமை, உணவு, தேவைகளில் மிகக் கவனமாக இருப்பார். கடுமையானவர். நான் அறிந்தவரை பிரதம மருத்துவரின் சொல்லை மட்டுமே கேட்பார். இங்கு எல்லோருக்கும் அதிகமாக மூன்று மணிநேரம் நித்திரை தான் கிடைக்கும்.மருத்துவர் வாணனுக்கோ அதைவிட குறைவான நித்திரைதான். இதற்குள் தாங்கமுடியா நாரி நோவிலும் அவஸ்த்தைப் படுவார்.

மருத்துவர் வாணன் அவர்கள் இதயத்துடிப்பை  ஸ்டதேஸ்கோப்பால் துல்லியமாக கேட்டு அறிவதைப்பற்றி கற்பித்தார்.கற்பித்த பின் அது பற்றிய பயிற்சி நூறு மடங்கு நடக்கும். விலாவாரியாக கேட்பார். தவறு செய்தால் திருந்தும் வரை பயிற்சி நடக்கும்.ஒவ்வொரு தடவையும் நீலன் நல்ல பெறுபேறுகளைப் பெற்றான் .

ஒருநாள்  நீலனைக் கூட்டிச்சென்று  இந்த கோமா நோயாளிக்கு எத்தனை இதயத்துடிப்பு கணித்து வா என்றார்.நீலனும் மீண்டும் மீண்டும் பரிசோதித்தான் துடிப்பு கேட்கவே இல்லை. இல்லை என்று சொன்னால் அவர் வருவார் சோதிக்க. நெஞ்சு படபடக்க மருத்துவரிடம் சென்றான் நீலன்இல்லை  என முகத்தை சுழித்து இழுத்தான். டேய்  செத்திட்டுதா ?இறுகியமுகத்துடன் உலுக்கினார். நீலனுக்கு வேர்த்துக் கொட்டியது. டேய் நீலன் அதை  செத்துத்தான் கொண்டுவந்தவங்கள்.நான் உனக்கு கோமா என்று பொய் சொன்னனான். நீலனுக்கு உயிர் வந்தது..

ஒருநாள் மருத்துவர் வாணன் நீலனைக்காட்டி பிரதமமருத்துவரிடம்  இவன் எல்லாம் செய்வான் எனக்கு திருப்தி என்றார். நீலனுக்கு லைசன்ஸ் கிடைச்சுட்டுது  . 

இன்று 2009 வைகாசி பதினைந்து. ஒரு மரத்திற்கு கீழ் காயமடைந்த சிலர் ஸ்ட்ரெச்சரில் கிடத்தப் பட்டிருந்தார்கள்.அதில் ஒருவராய் மருத்துவர் வாணனும் கிடந்தார். இராணுவம் அருகில் நெருங்கி விட்டது.செல் ,ரவை அந்த இடத்தை துவசம் செய்தது.இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் இராணுவம் வந்து விடலாம்.வாணன் நீலனை அழைத்தான். நீலன் ஆமி வரப்போறான். நான் கொள்கைப்படி  சாகப்போன். நீ நான் செத்ததை 
உறுதிப் படித்துப் போட்டு பிரதம மருத்துவரோட  போய்ச்சேர். மறுகணமே மருத்துவர் வாணன் சரக் சரக் என சயனைட் குப்பியைக் கடித்தார். சில கணத்தில் எல்லாம் நடந்து முடிந்தது .கைபிடித்து ஸ்டேதேஸ்கோப்பை  நெஞ்சில் வைத்து  இதயத்துடிப்பு  பார்ப்பதை படிப்பித்தவருக்கே  இதயத்துடிப்பை பரிசோதிக்க வேண்டி இருக்கிறது. ஐயோ  கடவுளே என நீலன் கத்தினான். ஸ்டேதேஸ்கோப்பை நடுங்கி நடுங்கி வைத்துப் பார்த்தான். ஓ--- உயிர்  இல்லை. 

மருத்துவர் வாணன் இயக்கத்திற்கு வந்து  இருபத்திரண்டு வருடங்கள்கால் இல்லாமல் போய்  பதினெட்டு வருடங்கள். போலி உலகில் மற்றவர்களுக்காய் வாழ்ந்து போனவர்களை யார் புரிவார்கள். எத்தனையோ உயிர்களை காப்பாற்றியவன் உயிரற்றுக் கிடக்கிறான்.

நீலனுக்கு  கண்கள் பனிமூட்டமாய்த் தெரிந்தது.அதற்குள் பிரதம மருத்துவர் மருத்துவர் வாணனின் முகத்தை தடவிக் கொண்டிருப்பதும் பின் பிரதம மருத்துவர் இன்னுமொரு மருத்துவருடன்  வித்துடலை ஸ்ரெச்சரில் தூக்கிப் போவதும் தெரிந்தது.     

-- நிரோன் --




Share/Save/Bookmark

2 கருத்துகள்:

Unknown சொன்னது…

aio kadavule

Kandumany Veluppillai Rudra சொன்னது…

உள்ளத்தைப் பிழிந்து,உயிரை நெகிழச்,செய்தது

கருத்துரையிடுக

Bookmark and Share