சமாதானம் எனப் பேசப்பட்ட காலம். வன்னியின் அழகு மேலும் மெருகேறியது. எங்களுக்கெல்லாம் உலகின் அழகே வன்னிதான் போல இருந்தது.அது போராளிகளுக்கும் ஓரளவு ஓய்வு காலம். அவர்களுக்கும் திருமணம் நடந்தது.இருவரும் நீண்டகாலப் போராளிகள் . அவனது பெயர் ஈழம் .அவன் மணலாறு படையணியில் இருந்து சண்டையில் காயமடைந்து, முதிர்ந்த மருத்துவர் ஒருவரின் சமயோசிதத்தால் மயிரிழையில் உயிர் பிழைத்தவன்.பின் மருத்துவப் பிரிவில் மருத்துவப்
போராளியாகி நீண்ட மருத்துவப் பணிசெய்தவன்.
அவள் மாலதி படையணியில் தொடர்ந்து கடமையாற்றி வந்தாள். அவளது பெயர் நிலா .சண்டையில் காயமடைந்து நிர்வாகப் பணியேற்றிருந்த வேளையில்தான் திருமணம் நடந்தது.அவள் தாயிற்கு ஒரே பிள்ளை. தந்தை சிறு வயதிலேயே இறந்திருந்தார்.
திருமணத்திட்கு சிலவருடங்கள் பின் அவர்களுக்கு ஒரு பெண்பிள்ளை பிறந்தது.பிள்ளையின் பெயர் ஆர்த்தி. இருவரும் தமது கடமையில்தான் கண்ணாய் இருந்தனர். மாதத்தில் ஒரு தடவையோ இரு தடவையோ தான்
சந்தித்துக் கொண்டனர்.
சண்டை உக்கிரமடைந்தது.அவன் மருத்துவப் போராளியாகவும், மருத்துவ நிர்வாகப் போராளியாகவும், சீரியமுறையில் பணி செய்து வந்தான்.சண்டை இன்னும் உச்சமடைந்தால் பிள்ளை தங்களை தேடக் கூடாது என்பதற்காய் பிள்ளையை பேர்த்தியாருடனேயே சேர்த்து விட்டு பழக்கி வந்தனர். பிள்ளைக்கோ மூன்று வயதுதான். அவனது பொறுப்பாளர் விடுமுறை கொடுத்து பிள்ளையைப் போய் பார்த்து வாரும் என்று அனுப்புவார். தாயும் இல்லை, தந்தையும் இல்லை என்றா பிள்ளை ஏங்கிப் போகும் .அவனோ வெளிக்கிட்டு நிர்வாகப் பணிகளைச் செய்திட்டு சத்தம் போடாமல் வருவான்.
கடமை, இலட்சியம்,நேர்மை, கடின உழைப்பு, வீண்விரையமாக்காமை, போராளிகளின் தேவைகளை கவனித்தலில் மிகச் சீரானவன். வீரச்சாவடையும் போராளிகளின் நிகழ்வுகளில் முழுமையாக நின்று தேவையானவற்றை செய்து முடித்தே வருவான். மாவீரர், போராளிகளுக்கு, செய்ய வேண்டியதை பொறுப்பாளருடன் கதைத்து செய்து முடிப்பான்.
ஒருநாள் பூநகரிப் பிரதேசத்திலிருந்த அவர்களுடைய பிரிவுக்குரிய களமருத்துவப் போராளிகளுக்கு ஏதோ காரணத்தால் காலை,மதிய உணவு சென்றடையவில்லை. மாலை ஆறுமணிக்கே சாப்பாடு கிடைக்காத செய்தி
கிளிநொச்சி நடுவப்பணியகதிட்கு வந்து சேர்ந்தது . பொறுப்பாளர் பணியகத்தில் இல்லை.இவன் முடிவெடுத்தான்.போராளிகளை
அழைத்தான் .இன்று எமது சகபோராளிகளுக்கு சாப்பாடு போகவில்லை. நான் இரவுக்கு வந்திருக்கிற சாப்பாட்டை அங்க கொண்டுபோகப்போறன். சொன்னவன் அவசரம் அவசரமாய் வாளியை மோட்டார் சைக்கிளில் கட்டிக் கொண்டு வெளிக்கிட்டான்.
பூநகரி களமருத்துவநிலையதிட்குப் போய்ச் சேர்ந்தான். அங்கு போராளிகள் வட்டமாக இருந்து பாணும் ,வாழைப்பழமும் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். ஏதடா பாண், இங்க ஒரு இடமும் வாங்கேலாதே. எட்டிப் பார்த்தான் சாக்கு மூட்டைக்கு மேல் பொறுப்பாளர் குந்தி இருந்தார். இதையும் சாப்பிடுங்கோ வாளியை நடுவில் வைத்துவிட்டு சுடச் சுட தேநீர் போட்டுத் தந்தான்.
அவன் சமைப்பதில் வல்லவன் ,சமைப்பதை பங்கிடுவதிலும்
அப்படித்தான்.அநேகமாக எங்கட எல்லா நிகழ்வுகளிலும் அவன்தான்
பிரதம சமையல் காரன். பொறுப்பாளர் உள்ளாக எல்லாரும் உதவிட்கு
நிற்பம்.பொறுப்பாளரின் நம்பிக்கை நட்சத்திரங்களில் அவனும் ஒருவன்.
இடப்பெயர்வுகளின் போது அவனது வீடு பலருக்கு அடைக்கலம்
கொடுத்தது. அதனால் அந்தக் குழந்தையோடையும் பழக்கம் ஏற்பட்டது. மக்களுக்கு தொற்றுநோய் வராமல் தடுக்கிற முக்கியபணியை அவன் செய்தான்.அதனால் மக்களுக்கு ஏதாவது தொற்றுநோய் வந்தாலும் என்று ஒரு தொகை மருந்து அவனிடம் பக்குவமாய் இருந்தது. கடைசி காலத்தில் ஒவ்வொரு நாள் மாலை/இரவில் பொறுப்பாளருடன் தொற்றுநோய் பிரச்சனை இல்லை என்ற உறுதிபாடு நிகழும்.
தொற்று நோயை வரவிடாமல் வைத்திருக்க இந்த இடப்பெயர்விலும் அவர்கள் பட்டபாடு வார்த்தையில் சொல்லமுடியாதது.தமது உயிர்களை பணயம் வைத்து தொற்றுநோய் வராமல் பாதுகாத்தனர் என்றால் அது மிகையாகாது.
வைகாசி 12ஆம் திகதி அவர்களது முகாம் பொஸ்பரஸ் குண்டினால் வெடித்துச் சிதறிற்று.அதில் எல்லோரும் காயமடைய இவனுக்கு பெரியகாயம். உடனேயே சத்திரசிகிச்சை செய்யப்பட்டது. மீண்டும்
சத்திரசிகிச்சை செய்யவேண்டி இருந்தது. அது பின் கை கூட வில்லை. அவனால் நடமாடமுடியவில்லை. படுத்த படுக்கையானான்.16ஆம் திகதி இராணுவம் எமது பகுதியை நெருங்கி விட்டது.அவனது துணைவி அவனைப் பார்க்க வந்திருந்தாள். அரைமணி நேரம் கதைத்துக் கொண்டிருந்து விட்டுச் சென்றாள். கதவைதாண்டமுன் திரும்பி அவனைப் பார்த்தாள். இறுதியாக இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்வது
அப்போது எனக்குத் தெரியவில்லை.அவள் துப்பாக்கி தோலில் தொங்க சென்றாள்.
இப்போது அவனது கழுத்தில் இரட்டை சயனைட் குப்பி தொங்கிற்று.முதல் இல்லாதது இப்ப எப்படி?அவனது துணைவி கொடுத்துவிட்டுப் போயிருந்தாள்.
இராணுவம் வந்திட்டுது.முடிந்தவரை எல்லாரையும் அப்புறப்படுத்தினோம். தன்னால ஏலாது .என்னை விட்டிட்டுப் போங்கோ. நான் கடிக்கிறன். தயவுசெய்து சாகாட்டி சுட்டிட்டுப் போங்கோ. சர சர என்று கடித்து முடித்தான்.வீரச்சாவு. நாங்கள் வித்துடலை விட்டிட்டு இருநூறு மீட்டர் போயிருப்போம். பொறுப்பாளர் ஓடி வந்தார். ஈழத்தை கொண்டுவரவில்லையடா. நாங்கள் சொன்னோம் ஈழம் வீரச்சாவு.டேய் வித்துடலையாவது? நாங்கள் பொறுப்பாளரை இழுத்து வந்தோம். எல்லோரும் கேவி அழுதோம்.உண்மையாய் சொன்னால் அழக்கூட உடலில பலம் இருக்கவில்லை. . .
ஒரு மரத்தடியில போய் இருந்தம் .கொஞ்ச பிள்ளைகள் ஓடிவந்துதுகள் .பொறுப்பாளரைக் கண்டவுடன் நின்று சொல்லிச்சுதுகள் அண்ணை நிலா அக்கா சண்டையில வீரச்சாவு.வித்துடல் எங்க? சிதறிப் போச்சு.பிள்ளைகள்
போய்க் கொண்டிருந்தார்கள்.
எனது மனமோ ஆர்த்திக் குட்டி ,ஆர்த்திக் குட்டி என்று குமுறிற்று .அவள் பேத்தியாரோட போயிருப்பாள்.ஏய் ஆரத்திக் குட்டி நான் உயிரோட இருந்தால் என்றைக்கோ ஒருநாள் குஞ்சைப் பார்க்க வருவன்.உன் அப்பா அம்மாவைப் பற்றி சொல்ல வருவன். பக்கத்தில் இருந்தவன் சொன்னான் .ஐயோ எல்லா இடமும் செல் விழுகிது இதில விழுகிது இல்லையே?
1 கருத்து:
Hi,
It is literature that comes from our beloved nation cherish our memories of past with our friends, land and the people. Your poems, stories not only will keep our memories fresh but also keep telling the truth. Keep it up. Keep your spirit high, like our friends who dedicate their life for our beloved nation.
K.Nathan
கருத்துரையிடுக