செவ்வாய், 16 மார்ச், 2010

தனியரசு

தமிழர் தாயகத்தை 
அந்நியர் வந்து, அநியாயம் செய்து,
இரு தேசத்தை ஒரு தேசமாய்,
ஒன்றை சிரச்சேதம் செய்தனர்.
தம் நலனுக்காய். 

தனித் தமிழ் தேசத்தை 
நடுக் கடலில் 
தத்தளிக்க விட்டுச் சென்றனர்.
தத்துப் பிள்ளையாக்கி.
தம் நிலத்தை,
தம் இனத்தை 
தாமே ஆளல் தவறா?
தனியரசு வேண்டாமாம்.
தரணி எங்கும்   தனியரசுகள் தான் 
தறி கெட்டுச் சொல்கின்றன. 

வாழும் இனத்தின் 
உயிரை காக்க உத்தரவாதம் தராமல்,
நாளும் பறிபோகும் நிலத்தை 
மீட்டுத் தராமல்,
அமிலம் ஊற்றி அரிக்கும் 
கலாசாரத்தை பாதுகாத்துத்தராமல்,
  
கருகிக் கிடக்கும் புன்னகை முகங்களை 
காணதது போல் 
தலையை உள்ளெடுக்கின்றன  ஆமைகள்.

தாயை புதைத்த பூமி,
மண் அள்ளி விளையாடிய பூமி,
பாரம்பரிய பூமி 
பாதுகாப்பு வளையமாம்.  
சொந்த  ஊர் திரும்பும் 
கனவு நனவாகாமல் 
உயிர்கள் போயிற்று  ஏக்கத்தோடு.  

தாயகத்திலும்,புலத்திலும்,
தனியரசு உத்தரவாதம் 
ஜனநாயக மொழியில்.
நா கண்டுகொள்ளவில்லை.

இரண்டு  லட்சம் மக்களின் உயிர்கள் 
உயிராகத்  தெரியவில்லை.
முப்பத்தையாயிரம்  வித்துடல்கள் 
காரணம் அறிய நா முயலவில்லை.

பிள்ளை சுவாசிக்க 
சுதந்திரக் காற்று இல்லை 
அபிவிருத்திப்  பூச்சாண்டி.

மேஜர்  இருவர் விரும்பினால் 
சுயமாய் திருமணம் செய்யலாம்,
வாழலாம். தடுக்க 
உலகில்  சட்டங்கள்  இல்லை.
இத்தனை யிரம்  மக்கள் 
சுயமாய் வாழவிரும்ப 
உலக சட்டம்  இடம்தராதாம்?

தமிழரின்  வாழ்வுரிமை 
பயங்கரவாதமா?
அந்தரித்த  குழந்தைகளுக்காய் 
கஞ்சி  வரிசையில் நின்றவரைக் 
கொன்றவர்கள்   இன்று  டாக்டர்கள்.    

பருந்திடமிருந்து 
கோழி  குஞ்சுகளைக்  காக்கும்.
பருந்தோடு, கழுகும்
சேர்ந்து  வந்திற்று.
குஞ்சுகளோடு கோழியும் 
காலியாயிற்று.     

சுயநலத்தினுள்  சுருங்கியவர் 
விரிதல்  வேண்டும்.
சுமை தாங்க இன்னும் இன்னும் 
அதிக தோள்கள் வேண்டும்.
அன்புக்காக  வாழ்தலும் 
வாழ்தலே  அன்புக்கானதுமான காலம் 
மீள காணல் வேண்டும்.     

அங்கயட்கன்னிகள்,
முத்துக் குமார்களின்  ஆத்மா 
சாந்தியடைய  வேண்டும்.

சில புள்ளிகளிலிருந்து 
நாடு  விரியும்.  
சின்ன வாயிலிருந்து  
புன்னகை  பிறப்பது போல.

-சுருதி-


Share/Save/Bookmark

2 கருத்துகள்:

Eelam சொன்னது…

உங்களுடைய கவிதை வரிகள் மிகவும் உணர்ச்சி மிக்க வரிகளாக இருக்கிறது.தொடர்சியாக உங்கள் ஆக்ககளை எழுதுங்கள்.

மதுரை சரவணன் சொன்னது…

கவிதை புன்னகை பூக்கிறது கோபத்துடன்.

கருத்துரையிடுக

Bookmark and Share