சனி, 28 ஜூலை, 2012

இறுதி ஆசை1,

அவனது சிறுபராயம் விளையாட்டில் கழிந்தது.கிட்டிப்புள்ளு,
கிளித்தட்டு,கிரிக்கட்,உதைபந்தாட்டம் என ஒரே விளையாட்டுத்தான்.
பாடசாலை அணிநடை,மெய்வல்லுனர் அணியிலும் இருந்தான்.

அவன் ஊரில் ஓரளவு பிரபல்யமான கோவில் இருந்தது.அந்தக்கோவில் 
கொடி ஏறினால் பத்து நாள் திருவிழா நடக்கும். நாலாம்,ஏழாம்,ஒன்பதாம்
திருவிழாக்களுடன்   பூங்காவனமும் கோலாகளமாய்   நடக்கும்.எல்லா 
நாள் திருவிழாவிலும் அவனது சமுகமும் இருக்கும். மேளக்கச்சேரிகளுக்கு 
முன் வரிசையில் வாயை ஆவென்றபடி இருப்பான்.பின் வீட்டில் கோயில் 
கட்டி அந்தக்கோயில் கொடிஏறும்.அங்கயும் மேளக்கச்சேரி இருக்கும்.
தகர ரின் எடுத்து மூடியை கழற்றிவிட்டு பழைய கொப்பித்தாள்களை 
அந்தப்பக்கம் வைச்சு சைக்கிள் ரியுப் ரப்பர் எடுத்து ரின் மூடி மாதிரி 
சுற்றிக்கட்டுறது.பிறகு அந்தப்பக்கம் தடியால் அடிச்சு மற்றப்பக்கம் 
தாளம் போட கிட்டத்தட்ட மேளச்சத்தம் வரும்.வீட்டுத்திருவிழாவில
மேள அடி இப்படித்தான் நடக்கும்.
       
ஒரு நாள் இப்படித்தான் பிஸ்கட்டுகளை கடவுளுக்குப் 
படைத்துவிட்டு சாமியை  பல்லக்கு மாதிரி அவனும் தம்பியும் 
வீட்டைச்சுற்றி தூக்கி வந்தனர்  .அப்ப அவனது சித்தி கூப்பிட்டுச் சொன்னா 
படைச்ச பிஸ்கட்டுகளை நாய் சாப்பிடுதென்று ,உடன அவனும் 
தம்பியும் அந்த இடத்திலேயே சாமியை போட்டிட்டு நாயை 
கலைத்துப்போனார்கள் .அதுக்குப்பிறகு   அவனது தாய் 
அவனை கோவில் கட்டி விளையாட விடுறயில்லை.

அவன் எண்பதுகளில இயக்கத்திற்கு சேர்ந்து அரசியல் வேலைகள் 
செய்தான்.அப்ப எல்லாம் அவன் அடிக்கடி நாளுக்கு நூறு கிலோமீட்டர்வரை 
சைக்கிள் ஓட வேண்டியிருக்கும்.அப்ப கராத்தே நீலப்பட்டிவரை பழகினான்.
தொண்ணூறுகளில் சில காலங்கள்(பெருமாள் கோவில் அருகில்) Body building பழகினான். 
பின் இயக்கத்தில் முழுமையாக Kick boxing பழகினான்.யோகாசனத்தை நண்பர்களுக்குப் பழக்கினான்.
இயக்கத்தில் கொமாண்டோ இராணுவப்பயிற்சியை பெற்றிருந்தான்.வன்னி 
முழுக்க புழுதிக்குள்ளாலும் ,கிளைமருக்குள்ளாலும் அவனது மோட்டார் 
சைக்கிள் ஓடிக்கொண்டிருக்கும்.  

2,

 அவன் 2010 இல் வவுனியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தான்.
பம்பைமடு மருத்துவமனையில் இருந்து அவனை கொண்டு வந்திருந்தார்கள்.
அவனுக்கு இடுப்புக்குக்கீழ் இயங்காது.வலது பின் இடுப்புப்பக்கமாய் 
படுக்கைப்புண் போட்டு பெட்சீட் சரியான மணத்துடன் ஊறிக்கொண்டிருந்தது.அவனுக்கு 
சரியான காய்ச்சலும் டாக்டர் பரிசோதிச்சு சொன்னார்.காயத்தால் 
வலது இடுப்பு எலும்பு உக்கிப்போட்டுது . "செப்டிசீமியா" ஆளை 
காப்பாத்தேலாது.
உங்கட உறவுகளோட கதைக்கோணும் என்று டாக்டர் கேட்க ,யாரும் 
இல்லை .என்னென்டாலும் தன்னோட கதையுங்கோ எதுக்கும் 
யோசிக்காதையுங்கோ என்றான்.
டாக்டர் சிரமப்பட்டுச் சொன்னார் தம்பி நீங்கள் இரண்டு நாள்தான் 
உயிரோடு இருப்பியள். அவன் எந்த முகமாற்றங்களுமற்று தலையாட்டினான்.
வலியால் முனகி முனகி இன்று இறந்தான்.டாக்டரும் வந்து உறுதிப்படுத்திவிட்டுப்போய்
விட்டார்.தாதி பிரேத அறைக்கு உடலை அனுப்ப காத்து இருக்கிறாள்.
டாக்டரும் கேட்டிருந்தார் உனது இறுதி ஆசை ஏதாவது இருந்தால் சொல் 
நிறைவேற்றுகிறேன் என்று.தாதியும் இதே கேள்வியை கேட்டிருந்தாள்.
அவன் "தமீழீழம் "தான் என்றிருந்தான்.

முற்றும் 

-நிரோன்-
Share/Save/Bookmark

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக