திங்கள், 1 மார்ச், 2010

-இதய நாட்டு.-




உலக அதிசயம் எது?
அன்பு தான்.
அன்பு உருவம் அற்றது .
அன்பு நூலளவாய் இருந்தாலும்
அதன் பலம் மலையையும் விஞ்சும்




அதிகாலை நாலு மணிக்கு
படிக்க எழும்பும் போதும்,
அசைவு தெரிந்து
அம்மா எழுந்து தேநீர் தருவா.
அடுக்களை வெக்கையில்
அவ அவிந்தும்
எம் மனங்களைக் குளிர்மையாக்குவா.
அம்மாவின் முகம் போல
உருண்டையாய் சோறு உருட்டி
சின்னக் கைகளுக்குள்
பக்குவமாய் வைப்பா .
முழுநிலவாய் முட்டை பொரித்து
நிலாக்காட்டி உணவு ஊட்டுவா.
உணவை மட்டு மல்ல.
அன்பையும் சேர்த்து,

இருக்கும் உணவை
அம்மா பகிர்ந்து ஊட்டுவா.
அம்மாவிற்கு இல்லாததை
அறியா பிஞ்சு மனதுடன்
ஆவென்று நாம் உண்ணுவோம்.

எம் நலனில்
தம் வாழ்வைக் கரைப்பா.
அம்மா
எம்வாழ்வின் கலங்கரை விளக்கு.

அழகுகளில் உச்சமானது மனஅழகு
அது அன்புக்குள்
இரத்தமும் சதையுமாய் இருக்கிறது.

ஐம்பது வயது தடியனையும்
அவனது தாய்
பத்து வயது பிள்ளையாய்ப் பார்ப்பா.

பிரசவ வேதனையில்
தாய் துடிப்பாள்.ஆனால்
என்ன அதிசயம்
எந்த தாயும் கண்ணீர் விட்டு
யாரும் பார்த்ததில்லை.
வெளியில்
உறவுகளின் கண்களில்
கண்ணீர் மழை கொட்டும் .
எப்படி இந்தவலைப்பின்னல்?

அன்பு எனும்
அச்சாணியில் மட்டும் சுழல்கிறது.
உண்மைவாழ்வு.

சின்னக் குழந்தையின்
அசைவாய்,மொழியாய்,
பஞ்சனைப்பாய்
துவளும் அன்பு.

அப்பாவின் நேர்த்தி,உண்மை,
சமூக நலன் தேடிய வாழ்வு
மனித அன்பாய் புடம் போடும்.

அன்பு- வாழ்வின் அர்த்தம்,
அழகின் உயிர்,
ஆழ்மனத்தின் சொத்து.
அன்பால்
கொலை ஜனானதும்,
திருந்தியதும் உண்டு.
நாத்திகனானதும்,
சித்தசுவாதீனமற்றுப் போனதும்,
எதிர்மறையானதும் உண்டு.

அன்பின் துளியில்
எந்த முரடனும்
எழமுடியாமல் அடிபடலாம்.
அன்புக்கு அணைபோடமுடியாது.

அன்புக்கு மொழியில்லை ,
சாதி,மத பேதமில்லை.
ஒரு உயிர் போதும்
உலகம் சமமாகும்.

தொலை தூர ஈருயிர்கள்
அருகில் இருப்பது போல்
ஒன்றாக வாழும் காதலில்.
சிலநேரம்
இரண்டில் ஓருயிர்
மனித பாஷையில்
இறந்தும் இருக்கக்கூடும்.

பளிங்கு மாளிகையிட்குள்
கிடைக்கா அன்பு
வெறும் குடிசைகளுக்குள்
அழகாக ஒளிந்திருக்கும்.

சந்திக்கும் ஒரு கணத்திட்காய்
எத்தனை மணி நேரத்தை
அந்தரிக்க விடுகிறது காதல்.
கண்பார்வை யற்றவனும்
மனதினால் பார்த்து பரிமாறுவான் காதல்.
இடுப்பிற்குக் கீழ்
இயங்காதபோதும்
இறுதிவரை கூடி வாழும் காதல்.

அன்புக்கு ஏங்குவது,
அடிமையாவது- காதல்.
காதல்
கைநாட்டு அல்ல -அது
இதய நாட்டு.
அன்பு விலை போகாது.
விலை போவது அன்பு ஆகாது.

வீரம் கலந்த அன்பில்
வரலாறு பிறக்கிறது.

அன்பு எந்த சிறைகளைத் தாண்டியும்
உள்நுழையும் ,அதன் இழை
கண்ணுக்கு புலப்படாதது.
தானாடாமல் தசையாடும்.
அன்பால் உயிர் விட்டவரும் உண்டு.
பிழைத்தவரும் உண்டு.

அன்பை அன்பு முள் கொண்டு
எடுத்துப் போகிறார்கள்
அன்பு
தரை மீனாய்த்தத்தளிப்பது தெரிந்தும்.
அன்புக்கு அடைக்கலம் தரமுடியாததால்
அலைக் கழிகிறது தென்றல்.

விலாங்கு மீன்கள் நிறைந்த உலகில்
அன்பு
அநாதரவாயும் துடிக்கும்.

அன்பை அடைவு வைத்து
முதலிடுபவர்கள்
முதலாளியாகிறார்கள்.

அன்பு
அலங்காறமற்றது.
அன்பை ஈர்க்க
அன்பு மட்டும் போதுமானதல்ல.

அன்பின் வலி தாங்க முடியாதது.
தவிர்க்கவும் முடியாதது.

நாகரீகம்
அன்பை அடித்துத்,
தோய்த்துப் போடுவதும் உண்டு.
நிஜ மனித மேம்பாட்டிற்கு
அன்பு வேர் விட்டு மேலும் மேலும்
ஆழ அகலமாய் பரவவேண்டி இருக்கிறது.

குடும்பம்
அன்பு இராச்சியம்.
குழந்தை
பாசத்தின் எல்லை.
சகி
கவிதை வாழ்வின் பிறப்பிடம்.
அம்மா
ஒரு உலகம்.
அப்பா
காலச்சூரியன்.
நண்பர்
உயிர் தரும் சுவாசக் காற்று.
அன்பு
எந்த இரும்பையும் உருக்கும்.
ஆனால்
தானாய் உருகும்.

காதல்
கைநாட்டு அல்ல -அது
இதய நாட்டு.



-சுருதி-



Share/Save/Bookmark

1 கருத்து:

ஹாய் அரும்பாவூர் சொன்னது…

அன்பு எனும்

அச்சாணியில் மட்டும் சுழல்கிறது.

உண்மைவாழ்வு.

சிறப்பான கவிதை நீளம் மட்டும் கொஞ்சம் அதிகம்

கருத்துரையிடுக

Bookmark and Share