சனி, 11 மே, 2024

திரும்பிப்பார்க்கிறேன்

நான் அங்கு ஞாயிற்றுக்கிழமைகளில்த்தான் செல்வது வழக்கம் , அன்று அவர்களுக்கு பயிற்சிநாள் இல்லை. இங்கு பயிற்சி எடுப்பவர்கள் எண்ணிக்கையில் குறைவானாலும் அன்பாலும் கலகலப்பாலும் குறைந்தவர்கள் இல்லை. எனது மோட்டார் சைக்கிள் எப்போதும் தூசு படித்துதான் இருக்கும் ஆனால் இம்முகாமிலிருந்து நான் வெளிக்கிடும் போது கழுவி துடைக்கப்பட்டிருக்கும், உண்மையில் இது எனக்கு பிடிப்பதில்லை. நான் அங்கு சென்று எனது கடமைகளை முடித்தபின் முகாம் பொறுப்பாளர் வழமைபோல் சாப்பிடக்கூப்பிட்டார். நான் பொறுப்பாளரிடம் ஒரு போராளியை பற்றி வினாவி எங்கே அவர் எனக்கேட்டேன். பொறுப்பாளரும் நீங்கள் அவனை பார்க்கவில்லையா? இல்லையே , அவனது குடும்பம் இராணுவக்கட்டுப்பாட்டுப்பகுதியில் வாழ்ந்துவருகிறது. அவனின் தாயார் போன மாதம் இறந்து எல்லாம் நடந்து முடிந்துவிட்டது,இரண்டுநாளுக்கு முதல்த்தான் எங்களுக்கு செய்தி கிடைத்தது. ஓ அப்படியா! ஆனால் அவன் வழமைபோல பயிற்சி எடுக்கிறான், எப்பிடியென்றாலும் அவனுக்குள்ள சோகம் இருக்கு. நான் வந்து சாப்பிடுகிறேன். அவன் தங்கும் கொட்டிலை கேட்டறிந்து அங்கு போனேன். அவனே வரவேற்றான் இருந்தாலும் அவன் மறைக்க முயலும் சோகம் வெளித்தெரிந்தது. அம்மாவை நான் நாலு வருசமாய் பார்க்கவில்லை . எனக்கு முதல் அம்மாவிற்கு போயிருவாவென்று நான் நினைச்சிருக்கவில்லை. கதைக்கமுடியாமல் ததும்பியவன் தொடர்ந்து கதைத்தான். நான் சின்னனில சாப்பாட்டு பார்சலை எடுக்காமல் பெடியள் கூப்பிட அவங்களோட பள்ளிக்கூடம் வெளிக்கிட்டுடுவான். அம்மா சாப்பாட்டை கட்டிக்கொண்டு கலைச்சுக்கொண்டு ஓடிவருவா, ஒருநாள் இல்லை இப்பிடி பலநாள் , சாப்பாட்டை என்ர பாக்கில வைச்சிட்டு மூச்சு வாங்கியபடி நான் போறதையே பார்த்துக்கொண்டு நிற்பா. சிலநேரம் அவ நிற்கிற இடம் பள்ளிக்கூட வாசலாகவும் இருக்கும். அவனை தேற்ற கதைத்துக்கொண்டிருந்தேன். உங்களிட்ட அம்மாவின் படம் இருக்கா? இல்லை என்றான். நான் உரியவர்களிடம் தெரியப்படுத்தினேன். நான் அடுத்த முறை அங்கு செல்கையில் அவனிடம் தாயின் படம் மட்டுமல்ல குடும்பப்படமும் இருந்தது. இன்று அவர்கள் இல்லை.


Share/Save/Bookmark

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Bookmark and Share